சீதாப்பூர்: காங்கிரஸ்,சமாஜ்வாடி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் மரபணுக்கள் பாகிஸ்தானை போன்றது என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உபி மாநிலம் சீதாப்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் ஆதித்யநாத் பேசுகையில், ‘‘ பாகிஸ்தானில் மக்கள் பட்டினியால் இறக்கின்றனர். ஆனால், இந்தியாவில் 80 கோடி பேருக்கு ரேஷனில் இலவச அரிசி வழங்கப்படுகிறது. நாட்டை ஆள்வதற்கு காங்கிரசுக்கு 65 ஆண்டுகள் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் நாட்டை மேம்படுத்தவில்லை. மக்களுக்கு மருத்துவ வசதிகள் எதையும் அளிக்கவில்லை.
மக்களின் மத உணர்வுகளில் விளையாடி வந்தனர். ஏழைகள் பட்டினியால் இறந்தனர். விவசாயிகள் தற்கொலை செய்தனர். ஊழல்வாதிகள் மற்றும் நாடு வளர்ச்சி அடைவதை விரும்பாதவர்கள் மோடி 3வது முறையாக பிரதமர் ஆவதை எதிர்க்கின்றனர். காங்கிரஸ்,சமாஜ்வாடியிடம் வளர்ச்சிக்கான எந்த திட்டங்களும் இல்லை.காங்கிரஸ்,சமாஜ்வாடி கட்சிகள் வெற்றி பெற்றால்,அரசியல் சட்டத்தை திருத்தி பிற்படுத்தப்பட்டோர்,தலித்,பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டை பறிப்பதற்கான சதி வேலைகளில் ஈடுபடுவர். காங்கிரஸ்,சமாஜ்வாடி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடம் பாகிஸ்தானிய மரபணுக்கள் உள்ளன’’ என்றார்.