புதுடெல்லி: உலக அளவில் சவால்களை எதிர்கொள்ள இந்தியாதான் உலகிற்கு வழிகாட்டியாக உள்ளது என்று உக்ரைன் அமைச்சர் தெரிவித்தார். ரஷ்யா தாக்குதலுக்கு இடையில் உக்ரைனின் முதல் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் டஜபரோவா இந்தியா வந்துள்ளார். நேற்று அவர் டெல்லியில் உக்ரைனின் நிலை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (மேற்கு) சஞ்சய் வர்மாவிடம் விளக்கினார். அதன்பின் அவர் கூறியதாவது: ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவதற்கான உக்ரைனின் முயற்சிகள் குறித்து இந்தியாவிடம் விளக்கி கூறினோம். அதிபர் ஜெலென்ஸ்கியின் சமாதான திட்டத்தில் இந்தியா சேர அழைப்பு விடுத்தோம்.
இந்த திட்டத்தில் இந்தியா இருப்பது எங்களுக்கு முக்கியம். இந்தியாதான் உலகிற்கு வழிகாட்டி. அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள இந்தியாதான் தற்போது உண்மையில் உலகின் ‘விஸ்வகுரு’. இன்று ரஷ்யா எனது நாட்டின் இருப்பையே கேள்விக்குறியாக்குகிறது. 1,500 ஆண்டுகால வரலாற்றில் உக்ரைன் எந்த நாட்டையும் தாக்கியதில்லை. மேலும் இது போருக்கான காலம் இல்லை. எங்களைப்பொறுத்தவரையில் இந்தியாவுடன் நடந்த இந்த சந்திப்பு ஒரு முக்கியமான ஒன்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.