சுதந்திர தினவிழா ஒத்திகையை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி 4,10 மற்றும் 13ம் தேதிகளில் காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேப்பியர் பாலம் முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரையிலான காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலைக்கு பதில் சிவானந்தா சாலை, முத்துசாமி பாலம் வழியாக பாரிமுனை செல்ல வேண்டும்.
பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள், வடக்கு கோட்டை பக்க சாலை வழியே செல்லலாம். வடக்கு கோட்டை பக்க சாலை வழியே முத்துசாமி சாலை, பல்லவன் சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சேரலாம். அண்ணா சாலையில் இருந்து கொடிமரச்சாலை வழியே பாரிமுனை செல்வோர் வாலாஜா சிக்னல் சந்திப்பு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாலாஜா சிக்னல் சந்திப்பு, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், என்.எப்.எஸ்., சாலை வழியாக பாரிமுனை செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.