சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது;
“சுதந்திர தினத்தையொட்டி மேதகு ஆளுநர் வழக்கம்போல அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அழைப்பு விடுத்தமைக்கு எமது நன்றி. எனினும், ஆளுநரின் தொடர் தமிழ்நாடு விரோத நடவடிக்கைகளின் காரணமாக இந்த நிகழ்வை விசிக புறக்கணிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
அதேபோல, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. “தமிழ்நாட்டின் ஆளுநர் மக்களின் நலன் குறித்த எந்தவிதமுன்னெடுப்புகளையும் செய்வதில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர். தான் சார்ந்த கொள்கையை பரப்பும் பிரச்சாரகர் போலச் செயல்படுகிறாரே தவிர ஆளுநரின் பொறுப்புணர்ந்து செயல்படவில்லை” என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் தற்போது விசிக மற்றும் மமக புறக்கணித்துள்ளது.