சிதம்பரம்: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கீழ வீதி சன்னதியில் உள்ள கோபுரத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க தேசியக்கொடி ஏற்றப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று கோயில் கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். அதன்படி நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கீழ சன்னதி கிழக்கு கோபுரத்தில் இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக நடராஜர் கோயிலில் தேசியக் கொடியை வெள்ளி தாம்பலத்தில் வைத்து சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமான் பாதத்தில் சமர்பித்து சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் அடுத்து கோயில் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் தலைமையில், பொதுதீட்சிதர்கள் மேளதாளத்துடன் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர். பிரதான வாயிலான 142 அடி உயர கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டவுடன் கோயிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் நடராஜர் கோயில் சார்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.