சென்னை: சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு பொதுமக்களுடன் உணவு அருந்தினர். தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, அறநிலையத்துறை ஆணையர் தர், கூடுதல் ஆணையர் சுகுமார், மாநகராட்சி பணிகள் நிலைக்குழு தலைவர் சிற்றரசு, மண்டல குழு தலைவர் மதன்மோகன், இணை ஆணையர் ரேணுகாதேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன், அடையாறு அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்தில் பங்கேற்றனர்.
பூக்கடை, தங்க சாலை தெரு ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், பாரிமுனை அரண்மனைக்காரன் தெரு கச்சாளீஸ்வரர் கோயிலில் அமைச்சர் கீதாஜீவன், அறங்காவலர் குழு தலைவர் ஜெகநாதன், மண்ணடி தம்புசெட்டி தெரு காளிகாம்பாள் கோயிலில் அமைச்சர் பெரியகருப்பன், அறங்காவலர் குழு தலைவர் மோகன், பூங்கா நகர் முத்துக்குமாரசாமி கோயிலில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, லிங்கி செட்டி தெரு மல்லீஸ்வரர் சென்னகேசவ பெருமாள் கோயிலில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சமபந்தி விருந்தில் கலந்துகொண்டனர்.
தாம்பரம் பேருந்து நிலையம் அருகே செல்வவிநாயகர் மற்றும் கோதண்டராமர் கோயில் சமபந்தி விருந்தில் அமைச்சர் சி.வி.கணேசன், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மண்டல குழு தலைவர்கள் காமராஜ், எஸ்.இந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.