சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டின் விடுதலை நாளான சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுவாழ்வு பிரமுகர்களுக்கு தேனீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும். அதன்படி நாளை மறுநாள் (15.08.2024) நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் தேனீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.ரவி, கடந்த 2019 ஜூலை மாதம் தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்ற நாளில் இருந்து, மக்கள் உணர்வுக்கு எதிராகவும், ஜனநாயக முறைகளை நிராகரித்தும் அதிகார அத்துமீறவில் ஈடுபட்டு வருகிறார். இவரது அத்துமீறல் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் தொடர்ந்து தீவிரமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழ்நாடு சட்டமற்றப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும், சட்ட மசோதாக்களும் உரிய முறையில் ஏற்கப்படாமல் மக்களாட்சி மாண்புக்கும், மரபுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்.
மாநில உரிமைகளை நிலைநாட்ட சட்டப் போராட்டம் நடத்தும் நெருக்கடியை உருவாக்கி வருகிறார். அறிவுத் துறையில் திறன் மிகுந்த இளைய தலைமுறையை உருவாக்கும் முயற்சிகளை சிதைக்கும் முறையில் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க தடை ஏற்படுத்தி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக போட்டி அரசை நடத்தி வருகின்றார். ஆளுநர் ஆளுநராக செயல்படாமல் பாஜகவின் ஊது குழலாக செயல்படுகின்றார். இந்த நிலையில் ஆளுநர் வழங்கும் தேனீர் விருந்தை புறக்கணித்து, அவரது ஜனநாயக விரோக செயலுக்கு கண்டனம் தெரிவிப்பது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.