சென்னை: 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விழா நடைபெறும் ஜார்ஜ் கோட்டையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காலர்கள் என 9 ஆயிரம் பேர் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா பேருரையாற்றுகிறார். இதனால் கோட்டை மற்றும் அடை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடலோர பாதுகாப்பு படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியோருடன் இணைந்து கடல் பகுதிகளை போலீசார் டிரோன்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். விமான நிலையம், ரயில் நிலைங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் இதர முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 565க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான்கு சக்கர மற்றும் இரு சக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் மூலம் தீவிர வாகன தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகளில் போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
மாநில பாதுகாப்பை பொருத்தமட்டில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில், அனைத்து மண்டல ஐஜிக்கள், போலீஸ் கமிஷனர்கள், டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்கள் மேற்பார்வையில் இரவு நேரங்களில் ரோந்து பணி, வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, ஆயுதப்படை, அதிரடிப்படை, ஊர்க்காவல்படை என மொத்தம் 1.20 லட்சம் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர தின விழாவுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் மாநிலம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
டிரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்க விட 8ம் தேதி முதல் 23ம் தேதி வரை தடைசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (அரசு ஏற்பாடுகள் தவிர) தலைமை செயலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், முதல்வர் இல்லத்தில் இருந்து தலைமை செயலகம் வரையிலும் செல்லும் வழித்தடங்கள் ‘சிவப்பு மண்டலாமாக’ அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் எந்தவிதமான பொருட்களும் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.