மதுரை: பதவி வெறியால் மனநலன் பாதிக்கப்பட்டவர் போல அண்ணாமலை பேசி வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம் செய்தார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று பாஜ பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஊர்ந்து, தவழ்ந்து, காலில் விழுந்து பதவிக்கு வந்த தற்குறி எடப்பாடி பழனிசாமிக்கு என்னைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்று விமர்சனம் செய்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அண்ணாமலைக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்; நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்ற பழமொழிக்கு ஏற்ப அண்ணாமலை செயல்படுகிறார். அதிமுகவின் வரலாறு தெரியாமல் மன அழுத்ததால் அண்ணாமலை பேசி வருகிறார். பதவி வெறியால் என்ன பேசுகிறோம் என்பதை தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார். ஆக்டோபஸ், அட்டைப்பூச்சியுடன் அண்ணாமலையை ஒப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அண்ணாமலையின் பொய்கள் அனைத்தும் அம்பலமாகி விட்டதால் இதுபோன்று பேசி வருகிறார். அண்ணாமலையை மருத்துவமனையில் சேர்த்துவிட தயார். அதற்குரிய செலவு முழுவதையும் அதிமுக ஏற்கும் என்று கூறினார்.