Saturday, July 19, 2025
Home மருத்துவம்ஆலோசனை அதிகரிக்கும் கல்லீரல் ஆபத்து… என்ன தீர்வு?

அதிகரிக்கும் கல்லீரல் ஆபத்து… என்ன தீர்வு?

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் இளங்குமரன்.கே

நம்முடைய உடலின் ‘வேதியியல் தொழிற்சாலை’ என்று அழைக்கப்படும் உறுப்பு எது தெரியுமா?

1.மூளை.
2.இதயம்.
3.கிட்னி
4.நுரையீரல்.
5.கல்லீரல்.

முதல் நான்கில் ஏதாவது ஒன்றை நீங்கள் சொன்னால், ரொம்ப ஸாரி. கல்லீரலை நீங்கள் அந்தளவிற்கு ஒரு முக்கியமான உடல் உறுப்பாக நினைக்கவில்லை என்றுதான்
அர்த்தம்.நம் உடலின் மிகப்பெரிய உறுப்புகளில் ஒன்றுதான் கல்லீரல். அது மட்டுமில்லாமல் உடலில் நிகழும் வளர்சிதை மாற்றம், நச்சு நீக்கம், செரிமானம், ஊட்டச்சத்துகளின் சேமிப்பு [metabolism, detoxification, digestion, storing nutrients] என முக்கியமான பணிகளுக்கெல்லாம் கல்லீரல்தான் ஒரே பாஸ்!. நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் இருக்கும் ஆபத்பாந்தவன் கல்லீரல். இதனால்தான் கல்லீரலை நம்முடைய ‘உடலின் வேதியியல் தொழிற்சாலை’ [[‘chemical factory’ of our body]] என்று அதிகம் அழைக்கிறார்கள்.

இப்பேர்பட்ட கல்லீரலுக்கு சிரோசிஸ், புற்றுநோய் அல்லது திடீரென ஏற்படும் கடுமையான காயம் [cirrhosis, cancer, sudden acute injury] போன்ற நாள்பட்ட பிரச்சினைகள் ஏதாவது வந்தால் நமக்கு ஆபத்துதான். இவற்றின் பாதிப்பினால் கல்லீரல் செயலிழக்கத் தொடங்கும். இதனால், ​​உடல் தன்னுடைய அத்தியாவசிய செயல்பாடுகளைச் செய்யவே கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில், நமக்கு கை கொடுக்கும் ஒரே நம்பிக்கை.. கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை! இதனால் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை என்பது ஒரு விருப்பத் தேர்வாக மட்டுமல்லாமல், ஒரு உயிர்காக்கும் செயல்முறையாகவும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது..

இந்தியாவை சத்தமில்லாமல் அதிர வைக்கும் கல்லீரல் நோயின் தாக்கம்!

இந்தியாவில் தொற்றாத கல்லீரல் நோய்களினால் [non-communicable liver disease] பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இப்போது மளமளவென அதிகரித்து வருகின்றன. இப்படி கணிசமாக அதிகரிப்பதற்கு காரணம் மூன்று சமாச்சாரங்கள். பெரும்பாலும் அவை, உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் மது அருந்துதல் [obesity, diabetes, alcohol consumption] போன்ற நம்முடைய வாழ்க்கை முறை காரணிகள்தான்.. அப்போலோ மருத்துவமனைகள், 2,50,000-க்கும் மேற்பட்டவர்களின் பெயர், வயது, ஊர் என எந்தவிதமான தனிநபர் விவரங்கள் எதுவுமில்லாத, ரிசல்ட்களை மட்டுமே உள்ளடக்கிய ஒரு சுகாதார பரிசோதனை ஆய்வை மேற்கொண்டது.

அந்த ஆய்வு அறிக்கைதான் இப்போது ’பகீர்’ அடைய செய்திருக்கிறது. காரணம், சாதாரண கல்லீரல் நொதி அளவுகள் உள்ளவர்களிடையே [normal liver enzyme levels] கூட, 65% பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோயின் [fatty liver disease] அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த முடிவுகள் அமைதியாக வந்து தாக்கும் சுனாமியைப் போன்ற அமைதியான அறிகுறிகளுடன் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

இறுதி நிலை கல்லீரல் சிரோசிஸ் [end-stage liver cirrhosis], ஹெபடோசெல்லுலர் கார்சினோமா (hepatocellular carcinoma (HCC)) மற்றும் கடுமையான கல்லீரல் செயலிழப்பு [acute liver failure] போன்ற பிரச்சினைகள் இருந்தால், அவை உங்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று அறிவுறுத்தும் முக்கிய அறிகுறிகளாகும். இத்தகைய நோயாளிகளுக்கு, உடனடி கவனம் தேவை. மேலும், கல்லீரல் மாற்று கிடைக்கும் வாய்ப்பு அவர்கள் உயிர் பிழைத்து வாழ்வதை தீர்மானிக்கும் அம்சமாக இருந்து வருகிறது.

யார் யாருக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை தேவை என்பதை எப்படி கண்டறிவது?

முதலில், அனைத்து நோயாளிகளும் பல்துறை சிறப்பு சிகிச்சை நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு குழுவினால் சோதனை செய்யப்படுவார்கள். மாற்று அறுவை சிகிச்சை தேவையா என்பதை இக்குழுவே மதிப்பீடு செய்யும். இந்தக் குழுவில், அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஹெபடாலஜிஸ்டுகள், மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர்கள், பல துறை நிபுணர்கள், உணவியல் நிபுணர்கள் மற்றும் ஃபிசியோதெரபிஸ்ட்கள் [surgeons, hepatologists, anesthesiology & intensive care physicians, multi-disciplinary specialists, dietitians & physiotherpists] என பல துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இருப்பதால், மதிப்பீடு பல கோணங்களில் மேற்கொள்ளப்படும்.

நோயாளிகளின் கல்லீரல் செயலிழப்பின் தீவிரத்தை மதிப்பிடுவதற்காக, இரத்த பரிசோதனைகள், படங்கள் மற்றும் இறுதி நிலை கல்லீரல் நோய்க்கான மாதிரி (MELD) போன்ற மதிப்பீட்டை அளக்கும் அமைப்புகள் [blood tests, images and scoring systems such as the Model for End-Stage Liver Disease (MELD] உள்ளிட பல சோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.

மறுபக்கம், உளவியல்ரீதியாக நோயாளிகள் தயார்நிலையில் இருக்கிறார்களா என்பதை கண்டறியும் சோதனைகள் மற்றும் இணை நோய்கள் குறித்த சோதனைகள் [psychological preparedness & comorbidities] மூலமாக பிற காரணிகளும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் யாருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவை என்பது முடிவு செய்யப்படுகிறது.

அதேநேரம், மஞ்சள் காமாலை, ஆஸ்கைட்ஸ் அல்லது ஹெபடிக் என்செபலோபதி, ஆரம்ப கட்ட கல்லீரல் புற்றுநோய் மற்றும் ஃபுல்மினன்ட் ஹெபடிக் செயலிழப்பு [decompensated cirrhosis marked by symptoms such as jaundice, ascites or hepatic encephalopathy, early-stage liver cancer, fulminant hepatic failure] போன்ற அறிகுறிகள் உள்ள டிகம்பென்சேட்டட் சிரோசிஸ் [decompensated cirrhosis] நோயாளிகளும் இதில் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடுமையான இதயம் அல்லது நுரையீரல் நோய், கட்டுப்பாடற்ற தொற்று அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பை மேற்கொள்ள வாய்ப்பில்லாத மனநலக் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வது என்பது அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கல்லீரல் தானம் யார் கொடுக்கலாம்?

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு, கல்லீரல் தானம் கொடுக்க 2 வகையான நன்கொடையாளர்கள் இருக்கிறார்கள்.முதலாவதாக, மூளைச் சாவு அடைந்த (கேடவெரிக்) நன்கொடையாளர்கள் [Deceased (Cadaveric) Donors]. மருத்துவமனை ஐசியுக்களில் மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நபர்களிடமிருந்து கல்லீரல் தானமாகப் பெறப்படுகின்றன. ஆனால், இந்தியாவை பொறுத்தவரையில் மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் எண்ணிக்கை மிகக் குறைவு.

2022-ம் ஆண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளில், 19% மட்டுமே இது போன்ற மூளைச் சாவு அடைந்த நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கின்றன. இது போன்று உடல் உறுப்பை தானமாக பெறுவதற்கு நோயாளிகள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதில் காத்திருப்போர் பட்டியலும் மிகப்பெரிதாக இருந்து வருகிறது. இது போன்ற சூழல், மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையை உருவாக்குகிறது என்பதே உண்மை.

இரண்டாவதாக, உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் நன்கொடையாளர்கள் [Living Donors].

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக அமைந்திருப்பது எதுவென்றால், உயிர் வாழ்பவர்கள் தங்களது கல்லீரலின் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கும் வாய்ப்பாகும் (living donor liver transplants (LDLT)). இதுபோன்ற சூழ்நிலைகளில், உடல் ஆரோக்கியமான, வயது வந்த, பொதுவாக ஒரே ரத்த வகையுடைய 18 முதல் 55 வயதுக்குட்பட்ட இரத்த சொந்தமுள்ளவர்கள் அல்லது நெருங்கிய சொந்தமுள்ளவர்கள் தங்களது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக கொடுக்கிறார்கள்.

கல்லீரலின் மீளுருவாக்கம் திறன் [regenerative capacity], நன்கொடையாளர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்பவர் என இருவருக்கும் ஒரு சில வாரங்களுக்குள் முழு கல்லீரல் செயல்பாட்டை மீண்டும் பெற அனுமதிக்கிறது. உண்மையில், 2022-ம் ஆண்டில், இந்தியாவில் 81% கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் உயிருள்ள நன்கொடையாளர்களின் கல்லீரலின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகள்தான், இந்த வகை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முறையில் இந்தியாவை முன்னணி நாடாக
விஸ்வரூபம் எடுக்க வைத்திருக்கிறது.

ஆரோக்கியமான உடல்நிலையுள்ள, தன்னார்வ கல்லீரல் நன்கொடையாளர்கள் தானம் செய்வதற்கு முன், தங்களது கல்லீரல் குறித்த முழுமையான மதிப்பீடுகளை முறையாக மேற்கொண்ட பிறகே தானமாக கொடுக்கின்றனர். பொதுவாக இந்த மதிப்பீடுகளில், கல்லீரல் செயல்பாடு சோதனைகள், இமேஜிங் சோதனைகள் அடங்கும். மேலும் சில நேரங்களில் கொழுப்பு கல்லீரல் நோய் அல்லது பிற சாத்தியமான அபாயங்களை மதிப்பிடுவதற்காக பயாப்ஸி எடுக்கப்படுவதும் வழக்கம்.

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது?

வழக்கமான அறுவைசிகிச்சைகளைப் போல் இல்லாமால், கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை என்பது மிகவும் சிக்கலான அதேநேரம் தொழில்நுட்ப ரீதியாக மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சையாகும். மூளைச் சாவு அடைந்த நன்கொடையாளரிடமிருந்து பெறப்படும் கல்லீரலை கொண்டு செய்யப்படும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை, முழு கல்லீரலும் நோயாளிக்குப் பொருத்தப்படுகிறது. அதேநேரம், உயிருடன் வாழும் நன்கொடையாளர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் (living donor liver transplantation (LDLT)), பொதுவாக பெரியவர்களுக்கு அவர்களது வலதுப்புற பகுதி [right lobe] மட்டும் உறுப்பு மாற்றாக பொருத்தப்படுகிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi