மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப் பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பிய நிலையில், நீர்வரத்துக்கு ஏற்ப உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக அங்குள்ள அணைகளில் இருந்து, உபரிநீர் திறப்பு குறைப்பால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்து வந்தது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை ெதாடங்கியுள்ளது. இதனையடுத்து, அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 19,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 23,000 கனஅடியாகவும் மாலையில் 24,000 கனஅடியாகவும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 30ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக காவிரியில் பரிசல் இயக்க, அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று 20,505 கனஅடியாக இருந்த நீர் வரத்து இன்று அதிகாலை வினாடிக்கு 26,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை மீண்டும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை நிரம்பியதால், கடந்த 7ம் தேதி மூடப்பட்ட மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி மதகுகள் மீண்டும் திறக்கப் பட்டது. உபரிநீர் கால்வாய் வழியாக வினாடிக்கு 4,500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் உடனுக்குடன் உபரி நீர் போக்கி மதகுகளை உயர்த்தி தண்ணீரை திறப்பை அதிகரிக்க தயார் நிலையில் பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.