தமிழ்நாட்டில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப பல்வேறு வகையான பயிர்கள் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகளவில் தொடர்ந்து பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. அந்த மண்ணில் விளையும் பயிர்களில் ரசாயனம் சேர்ந்து, நாம் உணவாக உண்ணும்போது அதிலும் ரசாயன நஞ்சு கலக்கிறது. இத்தகைய தீங்கை விளைவிக்கும் ரசாயன உரங்களைக் குறைத்து, திரவ உயிர் உரங்களை பயன்படுத்தினால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் நிலத்தில் விளையும் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும். இதனால் திரவ உயிர் உரங்கள் வேளாண் துறை மூலம் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வேலூர் (குடியாத்தம்), அரியலூர் (ஜெயங்கொண்டம்), கடலூர், பழனி, திருமங்கலம், புதுக்கோட்டை குடிமியாமலை, ராமநாதபுரம், சேலம், மானாமதுரை, புழல், தஞ்சாவூர் சாக்கோட்டை, விழுப்புரம் முகையூர், காட்டாங்குளத்தூர், போளூர், பாலக்கோடு, பவானி, அவினாசி, உத்தமபாளையம், நீடாமங்கலம், திருச்சி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மொத்தம் 22 மாவட்டங்களில் உயிர் உரங்கள் உற்பத்தி மையம் துவங்கப்பட்டு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் செயல்பட்டு வருகிறது.
திரவ உயிர் உரங்களின் செயல்பாடு குறித்து அறிந்துகொள்ள வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தோம். “கோடிக்கணக்கான கண்ணுக்கு புலப்படாத நன்மை செய்யும் நுண்ணுயிர்களை தன்னகத்தே கொண்டதே நுண்ணுயிர்கள் ஆகும். இதனை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உற்பத்தி மையங்கள் துவங்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாரத்தில் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுக்கு 55 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடியாத்தத்தில் உள்ள திரவ உயிர் உர உற்பத்தி மையத்தில் அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதர பயிர்கள்), ரைசோபியம் (பயறு), ரைசோபியம் (கடலை), பாஸ்போபேக்டீரியா, திரவ அசோபாஸ், திரவ பொட்டாஷ் என ஏழு வகையான திரவ உயிர் உரங்கள் அனைத்து பயிர்களுக்கும் பயன்படும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.புதியதாக இந்தாண்டு முதல் ஜிங் பாக்டீரியா உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனை நெற்பயிரில் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம். மண்ணின் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் காற்றிலுள்ள நைட்ரஜன் சத்தை தழைச்சத்தாக மண்ணில் நிலைநிறுத்தியும், மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தினை முறையே கரையும் மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தாக மாற்றியும், பயிருக்கு வழங்கும் நன்மை தரும் நுண்ணுயிர்களே உயிர் உரங்கள் ஆகும்.உயிர் உரங்களை பயன்படுத்துவதால் ரசாயன உரங்களின் பயன்பாடு 20 முதல் 25 சதவீதம் வரை குறைவதோடு மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது. திரவ உயிர் உரங்கள் 500 மில்லி அளவுள்ள பிரத்யேகமான கொள்கலன்களில் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு முன்பு வரை உயிர் உரங்கள் 200 கிராம் பாக்கெட்டுகளில் திட வடிவில் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இதனை 6 மாதங்கள் வரை மட்டுமே திறன்மிகு நிலையில் பயன்படுத்த இயலும். அதன்பிறகு நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கிவிடும். இக்குறையினைப் போக்கி, ஒரு வருட காலம் வரை திறன்மிகு நிலையில் உயிர் காரணிகளின் எண்ணிக்கை குறையாமல் பயன்படுத்தும் பொருட்டு திரவ நிலையில் உயிர் உரங்கள் உற்பத்தி செய்திட புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திரவ உயிர் உரங்களின் சிறப்புகள்
திரவ உயிர் உரங்கள் ஒரு மில்லிக்கு 108 என்ற எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் கூட்டமைப்பு உருவாக்கும் அலகுகளை கொண்டிருக்கும். திரவ உயிர் உரங்களின் ஆயுட்காலம் 12 மாதங்கள் ஆகும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக பாக்டீரியாவை பிரித்தெடுக்கும் (Tangential Flow Filtration System-TFF) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயிர் உரங்கள் தயாரிக்கப்படுகிறது.
உயிர் உரங்கள் தயாரிப்பதற்கு கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து தாய் வித்து (mother culture) பெறப்பட்டு பல்வேறு நிலைகளில் உயிர்க் காரணிகள் தரமான முறைகளில் பெருக்கம் செய்யப்படுகிறது. அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, பருத்தி, மிளகாய் போன்ற பயிர்களுக்கு பயன்படுத்தலாம். இது பயிர்களின் வேர் வளர்ச்சியை ஊக்குவித்து, நைட்ரஜன் சத்தை நிலைநிறுத்தும். ரைசோபியம் உயிர் உரத்தை நிலக்கடலை மற்றும் பயறுவகை பயிர்களுக்கு பயன்படுத்தலாம். இது பயிர்களில் வேர்முடிச்சை உருவாக்கி, தழைச்சத்தை நிலைப்படுத்த உதவிபுரிகிறது. பாஸ்போபாக்டீரியா உயிர் உரமானது அனைத்து பயிர்களுக்கும் மணிச்சத்தை கரைத்து, எளிதில் கிடைக்க செய்கிறது. பொட்டாஷ் பாக்டீரியா பயிர்களுக்கு கிடைக்காமல் இருக்கும் சாம்பல் சத்துகளை எளிதில் கிடைக்கச் செய்யும்.
உயிர் உரங்களின் பொதுவான பயன்கள்
உயிர் உரங்கள் பொதுவாக பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மண்ணின் உயிரியல் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது. பயிர்களுக்கு வறட்சியைத் தாங்கி வளரும் சக்தியை அளிக்கிறது. மண் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. ரசாயன உரங்களின் பயன்பாட்டை 25 சதவீதம் குறைக்கலாம். நிகர சாகுபடி செலவையும் குறைக்கலாம். இதனால் விவசாயிகளுக்கு லாபம் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு ஏற்படும். விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் திரவ உயிர் உரம் விற்பனை செய்யப்படுகிறது.
பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
உயிர் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் கலந்து உபயோகிக்கக் கூடாது. உயிர் உரங்களைக் குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். விதைகளை விதை நேர்த்தி செய்த பின்பு கடைசியாக உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். எனவே வேலூர் மாவட்ட விவசாயிகள் ரசாயன உரங்களைக் குறைத்து உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களைப் பயன்படுத்தி நுண்ணீர் பாசனத்திட்டம் மூலம் செயல்படுத்தி அதிக மகசூல் பெற்று நிகர லாபத்தை அதிகரிக்கலாம். இவ்வளவு நன்மைகள் மிகுந்த உயிர் உரங்கள் 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது’’ என கூறி முடித்தார்.
பயன்படுத்தும் அளவு
விதை நேர்த்தி- 125மிலி ஹெக்டேர்
நாற்றங்காலில் இடுதல்- 125மிலி ஹெக்டேர்
நாற்று வேரை நனைத்து இடுதல்- 250மிலி ஹெக்டேர்
நேரடியாக நடவு வயலில் இடுதல்- 500மிலி ஹெக்டேர்
மேடைகளில் அசோஸ்பைரில்லம்
திருச்சி வானொலியில் விவசாயம் குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சி தொடர்ச்சியாக வெளிவந்தது. துகிலி சி. சுப்பிரமணியன் என்ற வேளாண் அறிஞர் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார். அதில் பல பயனுள்ள தகவல்களை விவசாயிகளுக்கு விளக்குவார். அவர் பேசும்போது, அசோஸ்பைரில்லம் குறித்து அனைத்து விவசாயிகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துவார். வானொலி நிகழ்ச்சி மட்டுமில்லாமல், அவர் கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் விவசாயிகளிடம் அசோஸ்பைரில்லம் பற்றி தெரியுமா? என்றுதான் முதலில் கேட்பார். பின்பு அதைப்பற்றி விளக்கமாகப் பேசுவார். நுண்ணுயிர்கள் பயிர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பதால் அவர் அசோஸ்பைரில்லம் குறித்து அடிக்கடி இப்படி விளக்கம் தருவார்.