ஊட்டி: தீபாவளி பண்டிகை மற்றும் வார விடுமுறை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வந்த நிலையில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனினும், தொடர் விடுமுறை நாட்களின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக, பண்டிகை விடுமுறைகள் மற்றும் பள்ளி விடுமுறை காலங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கை. கடந்த மாதம் துவக்கத்தின் போது ஆயுத பூஜை விடுமுறை மற்றும் பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறை வந்த நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர்.
அதன் பின் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக 2 நாள் விடுமுறை மற்றும் வார விடுமுறை என தொடர்ந்து நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மற்றும் படகு இல்லங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது. சுற்றுலா பயணிகளால் ஊட்டி விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.