தஞ்சாவூர்: தமிழகத்தின் நெற்களஞ்சியத்தில் பருத்தி சாகுபடி அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசு விலை நிர்ணயம் செய்யாததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் நெற்பயிர் பாதிக்கப்பட்டபோது மாற்றுப்பயிர் குறித்த சிந்தனை விவசாயிகளிடம் வந்தது. பொதுவாக இம்மாவட்டங்களில் நெல்லுக்கு அடுத்தபடியாக பச்சைபயிறு, உளுந்து ஆகியவற்றை மட்டுமே விவசாயிகள் பயிரிட்டு வந்தனர். கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறினர்.
அதன்படி பருத்தி, வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்யத்தொடங்கினர். இதில் முதலிடம் பிடித்தது பருத்தி சாகுபடி. கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாபேட்டை, மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஊடுபயிராக முதலில் பருத்தி சாகுபடி செய்யத்தொடங்கினர். இதில் ஓரளவு லாபம் இருக்கவே தனிப்பயிராக சாகுபடி செய்யத் தொடங்கினர். 10ஆண்டுகளுக்கு முன் வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பாக திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய பகுதிகளில் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வந்தனர். தற்போது 2500 ஏக்கர் என அது உயர்ந்திருக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 15 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே பருத்தியை விவசாயிகள் சாகுபடி செய்து வந்த நிலையில் கடந்தாண்டில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வரை விலை கிடைத்ததால் நடப்பாண்டில்ருத்தியை 41 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பருத்திக்கு ஒன்றிய அரசு உரிய விலை நிர்ணயம் செய்யாததால் விவசாயிகள் இழப்புக்கு ஆளாகி வருகின்றனர். பருத்தி முழுக்க முழுக்க கோடை கால பயிர், மழை பெய்து வயலில் தண்ணீர் வடியாமல் நின்றால் பயிரிடப்பட்ட பருத்தி செடிகள் அழுகி விவசாயிகளுக்கு பெரும் பேரிழப்பை ஏற்படுத்தி விடும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.