பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியிலிருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் ராஜீவ்காந்தி நினைவு அமைதி பள்ளத்தாக்கு பூங்கா அமைந்துள்ளது. அங்கு தனியார் வாகனங்களில் வருகின்ற சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை முக்காலி பாரஸ்ட் ஸ்டேஷனில் பார்க் செய்தப்பின் வனத்துறையினர் வாகனங்களில் அடர்ந்த காட்டிற்குள் அழைத்து செல்கின்றனர்.
அப்போது காட்டு யானைகள், கரடி, காட்டு மாடு, குரங்குகள், சிங்கவால் குரங்குகள், மான்கள், காட்டு முயல்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் ஆகியவை பார்த்தும், இயற்கை அழகை ரசித்து செல்லமுடியும். இதற்காக பயணி ஒருவருக்கு 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
முக்காலி டவுன் பகுதியில் அட்டப்பாடி வனப்பகுதியில் சேகரிக்கக்கூடிய தேன், மூங்கில் கைவினைப்பொருட்கள், மூலிகைப்பொருட்கள், தையிலங்கள் ஆகியவை விற்பனை இக்கோ டூரிசம் ஷாப்புகளில் நடக்கின்றன. அமைதி பள்ளத்தாக்கு பூங்காவில் அமைந்துள்ள டவருக்கு மேல் ஏறினால் இயற்கை அழகையும், தூய்மையான காற்றையும் சுவாசிக்க முடியும்.
சையிலன்ட் வாலி ஆற்றில் 365 நாட்களும் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டியவாறு உள்ளது. தற்போது பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்தவாறு உள்ளனர். வனத்தை பற்றி ஆய்வு செய்வோருக்கான வசதிகளும், ஆராய்ச்சி மாணவ குழுவினருக்கும் வனத்துறையின் வசதிகள் செய்யப்படுகின்றனர்.