Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி சம்பங்கி பூ 8 டன்கள் தேக்கம் சாலையில் கொட்டிய அவலம்

*திண்டுக்கல் பகுதி விவசாயிகள் வேதனை

திண்டுக்கல் : வரத்து அதிகரிப்பு காரணமாக சம்பங்கி விலை வீழ்ச்சியடைந்ததால், 8 டன் பூக்கள் தேக்கம் அடைந்தன. இதனால் விவசாயிகள் சம்பங்களை சாலையில் கொட்டிய சம்பவம் திண்டுக்கல் பகுதியில் வேதனையை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்லில் உள்ள அறிஞர் அண்ணா பூ மார்க்கெட்டிற்கு, நகரை சுற்றியுள்ள சின்னாளபட்டி, கலிக்கம்பட்டி, வெள்ளோடு, அனுமந்தராயன்கோட்டை, அதிகாரிப்பட்டி, கோபால்பட்டி உட்பட பல கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் பூக்கள், நாள்தோறும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இந்த மார்க்கெட்டிலிருந்து கேரளா மற்றும் தமிழகம் முழுவதும் விற்பனைக்காக பூக்களை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். வரத்து அதிகரிப்பு மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் இல்லாததால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக, மாலை கட்ட முக்கியமாக பயன்படும் சம்பங்கி பூ வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த பூ நேற்று ஒரு கிலோ ரூ.5க்கு விற்பனையானது. மார்க்கெட்டில் நாளொன்றுக்கு சம்பங்கி பூ, சராசரியாக 8 முதல் 10 டன் வரை விற்பனைக்காக கொண்டு வரப்படும். நேற்று 10 டன் பூக்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் 2 டன் பூக்கள் மட்டுமே விற்பனையானது.

இதனால் விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்தனர். பூக்கள் பறிக்கும் கூலிக்கு கூட போதிய விலை கிடைக்காததால் சம்பங்கி விவசாயிகள், பூக்களை பறிக்காமலேயே செடியிலேயே விட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், விவசாய தொழிலாளர்களுக்கு சம்பளம், வாகன வாடகை கொடுத்தும் சந்தையில் சம்பங்கி பூக்களை வாங்க வியாபாரிகள் யாரும் முன் வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், தாங்கள் கொண்டு வந்த சம்பங்கி பூக்களை, வாகனத்துடன் கொண்டு சென்று திண்டுக்கல் - செம்பட்டி சாலையில் குட்டியபட்டி பிரிவு அருகே மூட்டை மூட்டையாக சாலையோரத்தில் கொட்டி சென்றது வேதனையை ஏற்படுத்தியது.மற்ற பூக்களின் விலை நிலவரம் (ஒரு கிலோ) : மல்லிகை பூ - ரூ.300, முல்லை பூ - ரூ.120, ஜாதி பூ - ரூ.200, கனகாம்பரம் - ரூ.300, காக்கரட்டான் ரூ.300, செவ்வந்தி ரூ.100, மரிக்கொழுந்து ரூ.50, மருகு ரூ.50, அரளிப்பூ ரூ.40, பட்டன் ரோஸ் ரூ.200.