புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட மனுவுக்கு, ஒன்றிய தத்தெடுப்பு வள ஆணையம் அளித்த பதிலில், ‘‘கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 18,179 குழந்தைகள் சட்டப்படி தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகள் 1,404 பேர் மட்டுமே தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு உடல், வளர்ச்சி, நடத்தை, உணர்ச்சி சவால்கள் காரணமாக கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. தத்தெடுப்புக்கான சிறப்பு குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தாலும், அவர்களை தத்தெடுக்கும் விகிதம் கணிசமாக குறைவாகவே உள்ளது. ’’ என கூறப்பட்டுள்ளது.
ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஜூலை 5ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள பராமரிப்பு நிலையங்களில் 420 சிறப்பு குழந்தைகள் தத்தெடுப்புக்காக காத்திருக்கின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனர் ஜாய் அவினாஷ் குமார் கூறுகையில், ‘‘ சட்டப்பூர்வமாக தத்தெடுப்பதற்கு தயாராக உள்ள 1,709 குழந்தைகளில் 76 சதவீதம் பேர் சிறப்புத் தேவைகள் கொண்டவர்கள். 2 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான 25 குழந்தைகள் மட்டுமே தத்தெடுப்புக்கு உள்ளன. இது மொத்தத்தில் 1 சதவீதம் மட்டுமே. 19 மாநிலங்களில், தத்தெடுப்பதற்கு 10 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான குழந்தைகள் இல்லை ’’ என்றார்.