Sunday, December 3, 2023
Home » வருமானமே பெண்களின் அடையாளம்!

வருமானமே பெண்களின் அடையாளம்!

by Porselvi

இந்த நவீன யுகத்திலும் கூட பல பெண்கள் நன்கு படித்து, பட்டங்கள் பல பெற்றும் கூட கை நிறைய சம்பாதிக்கும் நிலையில் இருப்பினும் திருமணத்திற்கு பின் வேலையை விட்டுவிட்டு குடும்பம் குழந்தை எனத் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்வதை பார்க்க முடிகிறது. பெரும்பாலும் இதற்கு கணவன் மற்றும் கணவன் வீட்டார் தான் காரணம் எனக் கூறினாலும். பல குடும்பங்களில் அந்தப் பெண்ணே சுயமாக முடிவெடுத்து வேலையை விட்டுவிட்டு வீட்டில் தங்கி விடுவதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் இனி ஒவ்வொரு மனிதனும் ஒரு அடையாளமாக மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உலகம் மாறி கொண்டிருக்கிறது. என்னதான் கணவன், அவரின் வருமானம், குடும்பம், குழந்தைகள் என இருந்தாலும் தனக்கென ஒரு வருமானமும் அடையாளமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம் என்கிறது ஜிடோ குழுமம். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜெயின் சமூகத்தினர் மற்றும் தொழிலதிபர்கள் ஒன்றிணைந்து இந்திய அளவில் பல பெண்களுக்கும் சொந்தமாக தொழில் துவங்கவும், அவர்கள் திறமைக்கேற்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் வழிகளையும் செய்து வருகிறார்கள். உங்களிடம் ஏதோ ஒரு திறமை இருக்கிறது ஆனால் அதற்கான தொழில் துவங்கும் பண வசதியும் அல்லது குறிப்பிட்ட வழிகாட்டுதலோ இல்லையெனில் இவர்களின் ஜிடோஸ்டோரி.காம் இணையதளத்தை தொடர்பு கொண்டு உங்களை குறித்து அத்தனை விவரங்களையும் பகிர்ந்தால் உங்களுக்கு தொழில் துவங்குவதற்கான வழிகாட்டுதல் கிடைப்பதுடன் தொடர்ந்து எப்படி தொழிலை பெருக்கலாம் என்பதற்கான வழிகளையும் காட்டுகிறார்கள். இது தவிர்த்து ஒருவேளை உங்களிடம் எதை சார்ந்து தொழில் துவங்குவது என்னும் எவ்வித எண்ணமும் இல்லை, ஆனாலும் ஏதேனும் ஒரு வருமானம் தேவை என்னும் பட்சத்தில் உங்களின் திறமை என்ன உங்களுக்கான தொழில் என்ன என்பதை அவர்களே கண்டுபிடித்து ஒரு குறிப்பிட்ட தொழிலையும் உருவாக்கி கொடுக்கும் வேலையையும் ஜிடோ லேடீஸ் விங்ஸ் செய்து வருகிறது.

இதற்காகவே சமீபத்தில் ஃபுட் அண்ட் வெல்னஸ் ஸ்டோரி என்னும் பிரம்மாண்ட நிகழ்வை ஜிடோ குழு நடத்தி முடித்து இருக்கிறார்கள். இதனை மிகப் பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறார்கள் ஸ்ரேயாஸ் குரூப் எக்ஸ்ப்ளோரின் இன்பினிட்டி மற்றும் அதன் உரிமையாளர் திரு ஜி. னிவாஸ் ராவ். ஜிடோ பொறுத்தவரை இந்திய அளவில் இருக்கும் பெண்களை ஒன்றிணைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் மற்றும் அதன் மூலம் வருமானம் என்னும் அடையாளத்தை உருவாக்குவது பிரதானமாக கொண்டு செயல்படுகிறார்கள். மேலும் சமீபத்தில் நடந்த ஃபுட் & வெல்னெஸ் ஸ்டோரி போன்ற பிரத்தியேக நிகழ்வுகள் மூலம் ஸ்டால்கள் அமைத்து அவர்களின் தொழிலை அடுத்தடுத்து பெருக்குவதற்கான வழிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். உணவே எப்படி உடலுக்கு மருந்தாகும் என்பதை அடித்தளமாக வைத்து தொழில் துவங்குவது மட்டுமின்றி அந்த தொழில் ஆரோக்கியமான தொழிலாகவும் இருக்க வேண்டும் என்பதையும் பிரதானமாக கொண்டு இந்த நிகழ்வை நடத்தி இருக்கிறார்கள். இதனாலயே இங்கே ஆரோக்கியம் சார்ந்த ஸ்டால்கள் நிறைய பார்க்க முடிந்தது. மண் பாத்திரங்கள், மண் வாட்டர் கேன்கள், வீட்டில் வளர்க்கப்படும் ஆர்கானிக் தாவரங்கள், கெமிக்கல் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இனிப்புகள் அல்லாமல் தேன், நாட்டுச் சர்க்கரை போன்றவற்றால் உருவாக்கிய இனிப்பு பண்டங்கள் தயாரித்து எப்படி ஆரோக்கியமான வழிகளில் எப்படி சம்பாதிப்பது இன்னும் வழிமுறைகளும் கூட அங்கே சொல்லப்பட்டன. மேலும் ஒவ்வொருவரும் எப்படிப்பட்ட உணவை எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த உணவு பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆரோக்கியத்தை வழங்கும் எப்படிப்பட்ட உணவுகள் பிரச்சனையை ஏற்படுத்தும் போன்ற கலந்தாய்வுக் கூட்டங்களும் மருத்துவர்களின் ஆலோசனைகளும் கூட இந்த நிகழ்வில் நடந்தன. இவையனைத்தையும் ஸ்ரேயாஸ் குரூப் எக்ஸ்ப்ளோரின் இன்பினிட்டி ஜிடோவுடன் இணைந்து நடத்தியிருக்கிறார்கள்.

அதன் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா மணியாள் பேசுகையில், இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, எல்லாம் நன்றாகஅமையும் என்றுதான் நினைத்துதிருமணங்கள் நடக்கின்றன. ஆனால் மனமாற்றம் யாராலும் தடுக்க முடியாத ஒன்று. வரும் அத்தனை உறவுகளும் நம்முடன் நிரந்தரமாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. ஆனால் நமக்கான வேலையும், அதனால் கிடைக்கும் வருமானமும் என்றைக்கும் நிரந்தரம். எல்லாம் கையை மீறிப் போகும் போது நமக்கான வேலையும், வருமானமும்தான் நம்மை நிலைப்படுத்தும். நாம் எதுக்காக ஓடுகிறோம் என்பதற்கான பதிலாக நிற்கும். ஏன் கணவன், மனைவியே ஒன்றிணைந்து ஒரு தொழில் துவங்கும் போது அவர்கள் குழந்தைகளுக்கே அது எடுத்துக்காட்டாக மாறி அவர்கள் வருங்காலத்தைக் கூட தைரியமாக, நம்பிக்கையாக வாழ வைக்கும். இனிவரும் காலங்களில் ஒருவர் வருமானத்தில் குடும்பம் நடத்துவதெல்லாம் வேலைக்கு ஆகாது. போலவே வீட்டில் இருப்பதும் கூட தொடர்ந்து மன உளைச்சலைத்தான் உண்டாக்கும். எல்லோருமே பிஸி வாழ்க்கை, தொழில், அதற்கான புரமோஷன், வருமானம் என்கையில் நம்மைச் சுற்றி ஒரு நேர்மறை சூழல் உண்டாகும். அப்பா, அம்மா இருவரும் குடும்பம், கெரியர் என இரண்டிலும் வெற்றியாளர்கள் எனில் அதைப் பார்த்து வளரும் குழந்தைகள் எப்படிப்பட்டவர்களாக வளர்வார்கள். மேலும் ஒரு ஆண் சம்பாத்தியம் அவன் குடும்பத்துக்கானது, ஆனால் ஒரு பெண் சம்பாத்தியம் என்பது அவள் குடும்பத்துக்கு மட்டுமல்ல அவள் சார்ந்த சமூகத்துக்கானது. அப்பெண்ணைப் பார்த்து பல பெண்கள் முன்னேற வாய்ப்பை உண்டாக்கும். என்பதே தாரக மந்திரமாக சொல்கிறார்கள் ஜிடோ குழு மற்றும் ஸ்ரேயாஸ் குரூப் எக்ஸ்ப்ளோரின் இன்பினிட்டி குழு மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா. நிகழ்வின் ஒரு அங்கமாக 27 ஹவுஸ் குக்குகள் ஒன்றிணைந்து உருவாக்கிய 1000 கப் கேக்குகள் சகிதமாக கின்னஸ் சாதனையும் படைத்துள்ளனர்.
– ஷாலினி நியூட்டன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?