டெல்லி : வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இறுதி நேர குழப்பத்தை தவிர்த்து முன்னரே தாக்கல் செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.2022 -2023ம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கு செலுத்த வேண்டிய வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் ஆகும். இந்த அவகாசம் நீட்டிக்கப்படாது என ஏற்கனவே ஒன்றிய அரசு தெரிவித்த நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளவர்கள் குறித்த விவரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதில் நேற்று மாலை 6.30 மணி வரை 6 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக நேற்று மட்டும் 26 லட்சத்திற்கும் அதிகமானோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகள் எண்ணிக்கை, இந்த ஆண்டு ஏற்கனவே முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் இன்று கடைசி நாள் என்பதால் இறுதி நேர குழப்பங்களை தவிர்க்க முன்னரே தாக்கல் செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் கணக்கு தாக்கல், வரி செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளில் உதவ வருமான வரி உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.