புதுடெல்லி: வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது. கணக்கு தணிக்கை செய்ய அவசியம் இல்லாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2025-26 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஆண்டு தோறும் ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில், இவர்கள் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை செப்டம்பர் 15ம் தேதி வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.
இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், புதிய ஐடிஆர் படிவங்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கேற்ப ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் கணக்கு தணிக்கைக்கு உட்படுத்த தேவையில்லாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ரிட்டன் தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31ல் இருந்து செப்டம்பர் 15 ஆக நீட்டிக்கப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.