சென்னை: ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் விபத்து, மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்வு் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு, உலக விபத்து தினத்தை முன்னிட்டு விபத்து மற்றும் முதலுதவி கையேடை வெளியிட்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘ டெங்கு பாதிப்பு ஆண்டுதோறும் 8 ஆயிரம் வரை இருக்கும். டெங்கு வரவே வராது என்று கூற முடியாது.
ஏனென்றால் இது மழைக்காலத்தில் உருவாகும் பாதிப்பு மழை வராமல் இருக்காது என்பதால், நன்னீரில் உருவாகும் ஏடிஸ் கொசுவால் டெங்கு உருவாகும். இந்த ஆண்டில் இதுவரை 5356 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது 531 பேர் டெங்கு பாதித்து சிகிச்சையில் உள்ளனர். நேற்று 43 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றளனர். மேலும், இந்த ஆண்டில் டெங்குவால் 5 பேர் மரணமடைந்துள்ளனர். பருவமழைக்காலம் வருவதால் அடுத்த 2 மாதத்தில் 1500 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட கூடும்.
காய்ச்சல் வந்தால் மருத்துவமனையில் சேர வேண்டும். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் பயனாக தமிழகத்தில் விபத்து இறப்புகள், கடந்த 2 ஆண்டுகளில் பாதிக்கும்மேல் குறைந்துள்ளன. மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக வந்த மாற்றுத்திறனாளிகளிடம் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க 2500 ரூபாய் வசூலித்தது தவறு. தேனி மருத்துவமனைக்கு ஆய்வு சென்றபோது ஸ்கேன் செய்வதற்காக பணம் வாங்கியவரை பணியில் இருந்து நீக்கிவிட்டோம். இதுபோல தவறு நடந்தால் எதிர்காலத்தில் சரி செய்யப்படும்” என்றார்.