Wednesday, February 28, 2024
Home » சென்னையில் ரூ.2005 கோடி செலவில் குடிநீர் ஆதாரங்களை ஒருங்கிணைக்கும் திட்டம்: 94.4 கி.மீ. வரை குழாய்கள் அமைக்கப்படுகிறது விரைவில் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் ஐ.ஐ.டி

சென்னையில் ரூ.2005 கோடி செலவில் குடிநீர் ஆதாரங்களை ஒருங்கிணைக்கும் திட்டம்: 94.4 கி.மீ. வரை குழாய்கள் அமைக்கப்படுகிறது விரைவில் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் ஐ.ஐ.டி

by Dhanush Kumar

* அனைவருக்கும் சமமான தண்ணீர் பங்கீடு முயற்சி

சென்னை: சென்னையில் கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 4.6 கோடி ஆகும். நாகரிக முன்னேற்றம், பொருளாதாரம், காலநிலை மாற்றங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி என தற்போதைய நகர மக்களின் மதிப்பீடாக 10 கோடிக்கும் மேற்பட்டோர் வசிக்கலாம் என பல்வேறு ஆய்வு அறிக்கை மூலம் தெரிகிறது. மக்களின் முக்கிய தேவையாக குடிநீர் விளங்குகிறது. சென்னையை பொறுத்தவரை 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. இதுதவிர குடிநீர் வாரியம் சார்பில் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரிகள் மூலம் தினசரி 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக குடிநீர் நிறுத்தம் அல்லது நீர் ஆதாரங்கள் வறண்டு போனால் சென்னை வாசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு சமமான நீர் விநியோகத்தை அளிக்கும் முயற்சியாக சென்னை குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வாரியம் ரிங் மெயின் சிஸ்டம் என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

அதன்படி, ரூ.2005 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதாவது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 426 சதுர கி.மீ பரப்பளவில் உள்ள சுமார் 94.4 கி.மீ வரை பெரிய அளவிலான குழாய்களை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வோய் கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் என ஆறு முக்கிய நீர் நிலைகளில் இருந்து பம்புகள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு இந்த புதிய குழாய் இணைப்புகள் மூலம் செலுத்தப்பட உள்ளன. இதன் மூலம் 11 விநியோக பகுதிகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து நீர் பொதுமக்களுக்கு அனுப்பப்பட உள்ளது. இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போது குடிநீர் விநியோகம் என்பது அந்தந்த நீர் ஆதார பகுதிகளில் இருக்கும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, மீஞ்சூரில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலமாக வடசென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சில சமயங்களில் நீர் வரத்து குறைவான காலங்களில் மாற்று நீர் ஆதாரங்கள் மூலமாக நீரை விநியோகம் செய்வது சவாலாக உள்ளது. ஆனால், இந்த குழாய் இணைப்பு திட்டம் மூலமாக எந்த நீர் ஆதார பகுதிகளில் இருந்தும் விநியோகிக்க முடியும். குறிப்பாக வடசென்னைக்குட்பட்ட திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலங்களுக்கு வீராணம் ஏரி மூலம் தண்ணீர் வழங்கப்படலாம். அதேபோல், இத்திட்டத்திற்கான விரிவான அறிக்கையை ஐஐடி மூலம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் பெறலாம் என எதிர்பார்க்கிறோம். மேலும், இப்பணிகளை 30 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இத்திட்டம் மட்டுமின்றி சென்னையில் 763 சதுர கி.மீ நீளத்திற்கும், 107 கி.மீ நீளத்திற்கும் என ரூ.1830 கோடி மதிப்பீட்டில் மற்றொரு ரிங் மெயின் சிஸ்டம் அமைக்கும் திட்டத்தையும் தொடங்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* சென்னையில் வீடுகளுக்கு குடிநீர் கட்டணமாக மாதம் ரூ.84 வசூலிக்கப்படுகிறது. அதேபோல், வீடுகளுக்கு லாரியில் குடிநீர் சப்ளையை பொறுத்தவரை 6 ஆயிரம் லிட்டர் ரூ.499க்கு வழங்கப்படுகிறது. மேலும், வணிக நிறுவனங்களுக்கு லாரி குடிநீர் 6 ஆயிரம் லிட்டர் ரூ.770க்கு கொடுக்கப்படுகிறது. இந்த விலை 2023-24 நிதியாண்டில் வீடுகளுக்கு 5 சதவீதமும், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 10 சதவீதமும் உயர்த்தப்பட்டபோது நிர்ணயம் செய்யப்பட்டதாகும்.

* ரூ.885 கோடி ஆண்டு வருவாய்

குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் மூலம் சென்னை குடிநீர் வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.885 கோடி வரை வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணம் மூலம் ரூ.505 கோடியும், மற்ற உள்ளாட்சிகள் தொழிற்சாலைகள், லாரி குடிநீர் வழியாக ரூ.380 கோடியும் கிடைக்கிறது.

* 12,722 மில்லியன் கன அடி நீர் ஆதாரம்

சென்னைக்கு மேற்பரப்பு நீர்தேக்கங்கள், நிலத்தடி நீர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமாகவும், குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், வீராணம் ஏரி ஆகியவற்றின் மொத்த கொள்ளளவாக 12,722 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இத்துடன் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு 12 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் பெறுவதற்கான ஒப்பந்தமும் நடைமுறையில் உள்ளது.

You may also like

Leave a Comment

10 + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi