Saturday, March 2, 2024
Home » தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,500 கன அடி உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,500 கன அடி உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

by Karthik Yash

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு, நீர்வரத்து அதிகரித்து வருவதால், ஏரி முழு கொள்ளளவை எட்டியது. தற்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால், நேற்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், தற்போது 22.35 அடி தண்ணீர் உள்ளது. அதேபோல் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில், தற்போது 3,210 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. மேலும், ஏரிக்கு நீர்வரத்து 514 கன அடியாகவும், ஏரியிலிருந்து வெளியேறும் நீரின் அளவு 163 கன அடியாகவும் உள்ளது.

இதற்கிடையே, செம்பரம்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் நாள்தோறும் மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி, ஏற்கனவே நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு, முதற்கட்டமாக 200 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நேற்று காலை 9 மணியளவில் 2ம் கட்டமாக கூடுதலாக 800 கன அடி உபரிநீர், ஏரியின் 16 மற்றும் 19 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்டது.

அந்தவகையில் தற்போது ஏரியிலிருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நேற்று மாலை 4.30 மணிக்கு, கூடுதலாக மேலும் 500கன அடி திறக்கப்பட்டது. அதன்படி, தற்ேபாது விநாடிக்கு 1,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆகவே, அனகாப்புதூர் மற்றும் அடையாறு கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கையாக, செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

19 − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi