இடைவிடாமல் போராடும் ராணுவம் ஜம்முவில் பரவும் தீவிரவாதம் 10ல் 8 மாவட்டத்தில் தாக்குதல்: 18 பாதுகாப்பு படையினர் உட்பட 44 பேர் பலி
ஜம்மு: ஜம்முவில் கடந்த ஓராண்டில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அங்குள்ள 10ல் 8 மாவட்டங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 18 பாதுகாப்பு படையினர், 13 தீவிரவாதிகள் உட்பட 44 பேர் பலியாகி உள்ளனர். ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 10 ஆண்டாக தீவிரவாத சம்பவங்கள் முழுக்க கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த 2021 முதல் மீண்டும் தாக்குதல்கள் தலைதூக்கத் தொடங்கின. குறிப்பாக, ராணுவ வீரர்கள் வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
குறிப்பாக ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் 2021 அக்டோபருக்குப் பிறகு நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 47 பாதுகாப்பு படையினர், 48 தீவிரவாதிகள், 7 பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், கடந்த ஓராண்டாக ரஜோரி, பூஞ்ச் மட்டுமின்றி ஜம்முவின் மற்ற 6 மாவட்டங்களிலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது. கடந்த ஏப்ரல்-மே மாதம் முதல் ரியாசி, தோடா, கிஷ்த்வார், கதுவா, உதம்பூர் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் நடந்த தொடர் தீவிரவாத சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தி உள்ளன.
ஜம்மு பிராந்தியதில் மொத்தமுள்ள 10 மாவட்டங்களில் 8ல் தீவிரவாத சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதில், 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 18 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர். இவர்கள் உட்பட மொத்தம் 44 பேர் தீவிரவாதத்திற்கு பலியாகி உள்ளனர். அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த ஆண்டு தோடா, கதுவா, ரியாசி மாவட்டங்களில் தலா 9 பேரும், கிஷ்த்வாரில் 5, உதம்பூரில் 4, ஜம்மு மற்றும் ரஜோரியில் தலா 3 பேரும், பூஞ்ச் மாவட்டத்தில் 2 பேரும் பலியாகி உள்ளனர்.


