சென்னை: தொடர் மழை காரணமாக வரத்து குறைந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தமிழகத்தின் வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து கோயம்பேட்டு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அனைத்து வகையான காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ஊட்டியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாள்தோறும் 2000 மூட்டைகள் கேரட் கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று 1000 மூட்டைகளுக்கு குறைவாக விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு கிலோ கேரட் நேற்று ரூ.120 என விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் கோயம்பேட்டில் இருந்து கேரட் வாங்கிச் சென்ற புறநகர் சில்லரை வியாபாரிகள் ஒருகிலோ கேரட் ரூ.180க்கு விற்பனை செய்தனர். காய்கறிகளின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய காய்கறிகள் விலை நிலவரம் (ஒரு கிலோ அளவில்): இஞ்சி ரூ.160, குடை மிளகாய் ரூ.150, பச்சை மிளகாய் ரூ.90, எலுமிச்சை ரூ.110, அவரை, காராமணி ரூ.60, சின்ன வெங்காயம் ரூ.70, சேனைக் கிழங்கு ரூ.75, பாகல், சேம்பு, காலிபிளவர், நூக்கல் ஆகியவை ரூ.50, தக்காளி ரூ.55, வெங்காயம், கத்திரி, பீர்க்கன் ஆகியவை ரூ.40, சவ்சவ், முள்ளங்கி, புடலை, கோவைக்காய், கொத்தவரை ஆகியவை ரூ.30 என விற்கப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ஊட்டியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கேரட்டின் வரத்து குறைந்து, விலையும் உயர்ந்து வருகிறது. காய்கறிகள் வரத்து சீரானாதும் படிப்படியாக விலை குறையும் என்றார்.