இஸ்லாமாபாத்: அலுவல் ரகசிய சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் துணைதலைவராக உள்ளவர் மெஹ்மூத் குரேஷி. மெஹ்மூத் குரேஷி வெளியுறவு துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். அப்போது, அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி டொனால்ட் லு மற்றும் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கான் சந்தித்து பேசினர்.
இருவரும் பேசிய விவரங்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக அலுவல் ரகசிய சட்டத்தின் கீழ் இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் குரேஷி மீது அலுவல் ரகசிய சட்டத்தை மீறியதாக வழக்கு பதிவு செய்த பெடரல் புலனாய்வு துறையினர் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து தெஹ்ரீக் கட்சியின் பொது செயலாளர் ஓமர் அயூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்து விட்டு வீட்டுக்கு வந்த குரேஷியை கைது செய்துள்ளனர். முந்தைய பாசிச ஆட்சியுடன் இதுபோன்ற அக்கிரமங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்தோம். தற்போது உள்ள இடைக்கால அரசு முந்தைய பாசிச அரசின் சாதனைகளை முறியடிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
*மாஜி அமைச்சர் மகள் கைது
பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை முன்னாள் அமைச்சர் ஷீரின் மஸாரியின் மகள் இமான் மஸாரியை போலீசார் நேற்று கைது செய்தனர். கடந்த வாரம் நடந்த பஸ்துன் இன மக்களின் பேரணியில் இமான் மஸாரி கலந்து கொண்டார். அரசு விவகாரங்களில் தலையிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை விமர்சித்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.