சென்னை: தகாத உறவை கண்டித்ததால், கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளியை கொன்று எரித்த மனைவி, காதலனை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வெண்மான்கொண்டான் செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான முந்திரிகாட்டில் கடந்த மாதம் 29ம்தேதி அடையாளம் தெரியாத சடலம் ஒன்று எரிந்து கொண்டிருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், உடையார்பாளையம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், எரிக்கப்பட்ட சடலம், ஜெயங்கொண்டம் அருகே வடகடல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (43) என்பதும், இவருக்கு அனுப்பிரியா (30) என்ற மனைவியும், 13வயதில் மகள், 10வயதில் மகன் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அனுப்பிரியாவிடம் நடத்திய விசாரணையில், தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து கொன்று, எரித்தது தெரிய வந்தது.இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘‘சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சுரேஷ், பூ கட்டும் தொழில் செய்து வந்துள்ளார். அனுப்பிரியாவின் சித்தப்பா மகனான ஆலவாயை சேர்ந்த வேல்முருகன் (33), தங்கை என்ற முறையில் அனுப்பிரியா வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். நாளடைவில் இருவருக்கும் பழக்கம் அதிகமாகி கடந்த 2 ஆண்டுகளாக தகாத உறவில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தெரிந்ததால் மனைவியை சுரேஷ் பலமுறை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனுப்பிரியா, கணவரை கொலை செய்ய காதலன் வேல்முருகனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகைக்காக குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்து கொடுக்க வாருங்கள் என்று சென்னையில் இருந்த கணவர் சுரேஷை கடந்த 29ம்தேதி வரவழைத்தார். அதன்படி வந்த கணவரை, அன்றிரவு பைக்கில் வடகடல் கிராமத்துக்கு வெண்மான் கொண்டான் வழியாக அனுப்பிரியா அழைத்து சென்றார்.
வழியில் அரசுக்கு சொந்தமான முந்திரி தோப்பு அருகே சென்றதும் தனக்கு மயக்கம் வருவதாக கூறி பைக்கை நிறுத்தும்படி அனுப்பிரியா கூறியுள்ளார். இதனால் பைக்கை நிறுத்தி விட்டு சுரேஷ் கீழே இறங்கி நின்றார். அப்போது முந்திரி தோப்பில் மறைந்திருந்த காதலன் வேல்முருகன், அனுப்பிரியாவுடன் சேர்ந்து அரிவாளால் சுரேஷை வெட்டியுள்ளார். இதில் அவர் அங்கேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து சுரேஷ் உடலை சாக்குமூட்டையில் கட்டி முந்திரி தோப்புக்குள் தூக்கி சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பியுள்ளனர் என்று தெரிவித்தனர். இதையடுத்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து அனுப்பிரியா, காதலன் வேல்முருகன் ஆகியோரை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.