கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஜார் பகுதியில் வசித்து வந்தவர் மாரிமுத்து (44). இவர் அங்குள்ள மாரியம்மன் கோயிலில் அர்ச்சகராக இருந்தார். இவரது மனைவி வினோதா. தம்பதிக்கு 18 வயதில் மகள், 15 வயதில் மகன் உள்ளனர். ஆயுதபூஜையையொட்டி கோயிலில் பூஜை செய்துவிட்டு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை கோத்தகிரி அருகே மாதா கோயில் பகுதியில் உள்ள கோவில் மேடில் உள்ள வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் அர்ச்சகர் மாரிமுத்து இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சேலம் மாவட்டத்தை சேர்ந்த முரளிதரன் என்பவரது மனைவி தனலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து கோத்தகிரி அருகே எம்.கைகாட்டி பகுதியை சேர்ந்த உதயகுமாருடன் (40) திருமணம் செய்யாமல் கோத்தகிரி மாதா கோயில் பகுதியில் உள்ள கோவில் மேடு பகுதியில் 3 குழந்தைகளுடன் வாழ்ந்துள்ளார். உதயகுமார் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில்தான் மாரிமுத்துவுக்கும், தனலட்சுமிக்கும் தகாத தொடர்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஆயுதபூஜை பணிகளை மாரியம்மன் கோயிலில் முடித்துவிட்டு தனலட்சுமியின் வீட்டிற்கு மாரிமுத்து சென்றுள்ளார்.
அங்கு தனலட்சுமியும், மாரிமுத்துவும் ஒன்றாக இருந்துள்ளார். அப்போது உதயகுமார் திடீரென அங்கு வந்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. அப்போது மாரிமுத்துவை உதயகுமார், தனலட்சுமி தாக்கியதில் அவர் இறந்தார். பின்னர் வீட்டு வாசலில் உடலை போட்டுவிட்டு அதிகாலை இருவரும் தப்பினர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயிலில் பதுங்கி இருந்த உதயகுமார் மற்றும் தனலட்சுமியை கைது செய்தனர்.