நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், ஆலத்தூநாடு, ஊர்ப்புறத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (42) விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி கலாவதி (40). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள் உள்ளனர். அதில் ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. கணவன், மனைவி இருவரும், கேரளாவுக்கு எஸ்டேட் வேலைக்கு சென்று வருவது வழக்கம். அப்போது, திருப்புலிநாடு, கீரைக்காட்டை சேர்ந்த சக்திவேல் (32) என்பவருடன், கலாவதிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில், தகாத உறவாக மாறியது. இருவரும், அடிக்கடி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தனர். இது தெரிந்து ரவிச்சந்திரன் மனைவியை கண்டித்துள்ளார். அதனால், அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், ஒரு ஆண்டுக்கு முன், கலாவதி, கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இரண்டு மாதம் கழித்து சமாதானம் செய்து, மீண்டும் அழைத்து வந்தார் ரவிச்சந்திரன்.
அப்போதும் சக்திவேலுடன் இருந்த கள்ளத்தொடர்பை கைவிடாமல் கலாவதி, தொடர்ந்து போனில் பேசியுள்ளார். 2 நாட்களுக்கு முன் இது தொடர்பாக, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் மனைவியை அடித்து உதைத்தார். கணவர் உயிரோடு இருந்தால் கள்ளக்காதலனுடன் சந்தோஷமாக இருக்க முடியாது என கருதி அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டுக்கு வெளியே படுத்திருந்தார் ரவிச்சந்திரன்.
கலாவதி நள்ளிரவு 12 மணிக்கு சக்திவேலை வரவழைத்து, இருவரும் சேர்ந்து அவரை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி விறகு கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக, அசைவற்று கிடந்த ரவிச்சந்திரனை வந்து பார்க்கும்படி தெரிவித்து நாடகமாடியுள்ளார். இதுகுறித்து செங்கரை போலீசார் வழக்கு பதிந்து கலாவதி, அவரது கள்ளக்காதலன் சக்திவேல் இருவரையும் நேற்று மதியம் கைது செய்தனர்.