சண்டிகர்: பஞ்சாப் மாநில மூத்த தலைவர், அகாலிதளம் கட்சியின் முக்கிய தலைவருமான சுக்தேவ் சிங்கிற்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது, நிமோனியா காய்ச்சலுக்காக சிகிச்சையில் இருந்த சுக்தேவ் சிங் உயிர், மாரடைப்பால் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர். அவருக்கு வயது 89. சுக்தேவ் சிங் திண்ட்சா சங்ரூர் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்.
வாஜ்பாய் அரசாங்கத்தில் விளையாட்டு, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இவரின் மகன் பர்மிந்தர் சிங் திண்ட்சா, பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம், பாஜ கூட்டணி அரசின் போது நிதியமைச்சராக இருந்தார். சுக்தேவ் சிங் திண்ட்சா மறைவுக்கு பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களும், விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.