Sunday, March 3, 2024
Home » 100 நாள் வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு ஆதார் இணைப்பு மூலம் சம்பளம் பட்டுவாடா அமல்: தகுதியற்றவர்களாக 11.36 கோடி பேர் நீக்கம்

100 நாள் வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு ஆதார் இணைப்பு மூலம் சம்பளம் பட்டுவாடா அமல்: தகுதியற்றவர்களாக 11.36 கோடி பேர் நீக்கம்

by Ranjith

சென்னை: கிராமப்புற மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த கிராமமக்கள், குளங்களை தூர்வாருதல், கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றனர். இதன் மூலம், நாடு முழுவதும் கோடிக்கணக்கான கிராமமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இத்திட்டத்தின் பயனாளிகள் தங்களின் வேலை திட்ட அட்டையுடன் ஆதார் எண் இணைக்க ஒன்றிய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2022ல் உத்தரவிட்டது.

ஆதாரை இணைக்க கடந்த ஆண்டில் 5 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை முடிந்த நிலையில் இனியும் அவகாசம் நீட்டிக்கப்படாது என ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி, புத்தாண்டு தினமான நேற்று முதில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஆதார் இணைப்பு மூலம் சம்பளம் பட்டுவாடா செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.கடந்த 3 ஆண்டுகளில் ஒருநாளாவது வேலை செய்தவர்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக கணக்கில் கொள்ளப்படுவார்கள்.

முந்தைய நடைமுறையில், வேலை செய்யாதவர்கள் பெயரும் எழுதி, அதற்கான சம்பளம் பெறப்பட்டு முறைகேடும் பல நடந்ததாக ஒன்றிய அரசு குற்றம்சாட்டுகிறது. எனவே போலி பணியாளர்களை தடுக்க, ஆதார் மூலம் வேலை திட்ட அட்டை இணைக்கப்பட்டு, அதன் மூலம் வங்கி கணக்கு இணைப்பதன் மூலம் முறைகேடுகள் தவிர்க்கப்படும். அதோடு, பணியாளர்களுக்கு சம்பளமும் விரைவாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறி உள்ளது. கடந்த 2022 ஏப்ரலில் ஆதார் இணைப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதற்கட்டமாக 7.6 கோடி பேர் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டனர்.

நடப்பு நிதியாண்டில் 1.9 கோடி பதிவு செய்த தொழிலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும், இத்திட்டத்தின் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 25.69 கோடியாக இருந்த நிலையில் தற்போது 14.33 கோடி பயனாளிகள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாக ஒன்றிய அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 11.36 கோடி பேர் தகுதியற்றவர்களாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* கொடூரமான புத்தாண்டு பரிசு
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘கடந்த டிசம்பர் 27ம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, இத்திட்டத்தில் மொத்த பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களில் 34.8 சதவீதம் (8.9 கோடி) பேரும், செயல்பாட்டில் உள்ள 12.7 சதவீதம் (1.8 கோடி) பேரும் ஆதார் இணைப்பு மூலம் சம்பளம் பட்டுவாடா திட்டத்தில் தகுதியவற்றவர்களாகி உள்ளனர்.

கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை, அடிப்படை வருமானம் ஈட்டுவதில் இருந்து விலக்கி வைத்து, கொடூரமான புத்தாண்டு பரிசை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தின் மீதான பிரதமர் மோடி கொண்டிருக்கும் வெறுப்பால், தொழில்நுட்பங்கள் ஆயுதமாக்கப்படுவதை நிறுத்த வேண்டும்’’ என கூறி உள்ளார்.

You may also like

Leave a Comment

five + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi