மதுரை: மருத்துவக்கல்லூரிகளில் காலியாகவுள்ள டீன்களை உடனடியாக நியமிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை அரசு மருத்துவமனை டீன், கடந்த ஏப். 30ம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது மூத்த பேராசிரியர்கள் மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர்களாக பதவி வகித்து வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனை தமிழகத்தில் இரண்டாவது பெரிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக இயங்கி வருகிறது. இங்குள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண நிரந்தரமாக டீன்னைபணியமர்த்துவது மிகவும் அவசியம். மதுரை மட்டுமின்றி தேனி, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட பல அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் டீன்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் டீன்களை நியமிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சுகாதாரத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘‘காலியாக உள்ள டீன் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முறையாக அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கும் விரைவில் நியமனம் செய்யப்படும்’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘ஏற்கனவே கல்லூரிகளுக்கான டீன் யார் என்று முடிவு செய்திருப்பீர்கள். அந்த நடைமுறையை தாமதப்படுத்த வேண்டாம். காலியாகவுள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கான டீன் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நியமனங்களை நீதிமன்றம் கண்காணிக்கும்’’ எனக் கூறி, விசாரணையை தள்ளி வைத்தனர்.