சென்னை: டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டிகளில் செல்வோருக்கு உடனடி அபராதம் விதித்து ரயில்வே பாதுகாப்பு படை குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முன்பதிவு செய்யாத பயணிகளும், திடீரென முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணிக்கிறார்கள். இதனால் முன்பதிவு செய்தவர்கள் பெரும் அவதிக்கு ஆளாக நேரிடுகிறது. இதனை தடுப்பதற்காகவும், கண்காணிப்பதற்காகவும், சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கிறது. இதர பயணியர் பயணம் செய்வதை தடுக்கவே இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவு ரயில்களில், டிக்கெட் பரிசோதகர்கள் குழுவினர், திடீர் திடீரென சோதனைகளை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
சென்னை – கோவை, திருச்சி, மதுரை வழித்தடங்களில் செல்லும் ரயில்களில், ரயில்வே பாதுகாப்பு படை குழுவினரும் சோதனை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் உள்ளனர். அதில் 2 பாதுகாப்பு படையினருடன் ஒரு டிடிஆரும் உள்ளனர். ரிசர்வ் பெட்டிகளில், யாராவது, முன்பதிவு செய்யாதவர்களும் ஏறிவிடுகிறார்களா, பெட்டிகளை ஆக்கிரமித்துவிடுகிறார்களா என்பதை கண்காணிக்கிறார்கள், அப்படி யாராவது ஆக்கிரமித்திருந்தால் அந்த பயணிகளுக்கு அந்த இடத்திலேயே அபராதமும் விதிக்கிறார்கள். அவர்களிடம் உரிய டிக்கெட் இல்லை என்றால், கீழே இறக்கி விடப்பட்டு, முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். டிக்கெட்டே இல்லாமல் வருவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. ரயில்வே பாதுகாப்பு படையின் இந்த அதிரடியானது முன்பதிவு செய்து பயணிப்போருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.