வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே 10 ஊரக மக்களுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய அரசால் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களுக்கு சென்றடையும் முறையில் முகாம்கள் அமைக்கப்பட்டு கலெக்டர், அரசு அலுவலர்கள் நேரடியாக பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .
அதன்படி நேற்று நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மம்பேட்டை, அலசந்தாபுரம், நாராயணபுரம், புல்லூர் உள்ளிட்ட 4 ஊரக பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் திம்மாம்பேட்டை தனியார் மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் வென்மதி முனுசாமி, நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமுடி ஆகியோர் தலைமை தாங்கினார்.
வாணியம்பாடி தாசில்தார் சிவப்பிரகாசம், திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர் வசுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்பாபு, வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் வழங்கினர்.
அப்போது, புல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா அருள், திம்மாம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன், அலசந்தாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரளா தமிழ்ச்செல்வன், நாராயணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கிளியம்மாள் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் ஆலங்காயம் ஊராட்சிக்கு உட்பட்ட நிம்மியம்பட்டு, வள்ளிப்பட்டு, பெரியகுரும்பதெரு , வெள்ளக்குட்டை, பெத்தவேப்பம்பட்டு, கொத்தகோட்டை ஆகிய 6 ஊரக பகுதி மக்களுக்கு வாணியம்பாடி அடுத்த மேல் நிம்மியம்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி தலைமையில் நடந்தது . மாவட்ட ஊராட்சி செயலர் சுசிலாராணி, வாணியம்பாடி ஆர்டிஓ அஜித்தா பேகம், வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் வழங்கினார்.
இந்த இரு முகாம்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை, எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை, வேளாண்மை விவசாயிகள் நலன் துறை, கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தேர்வு துறை, தொழிலாளர்கள் நல வாரியம் வேலைவாய்ப்பு துறை, உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு ஊராட்சி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர். சில மனுக்களின் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
பெறப்பட்ட மீதமுள்ள மனுக்கள் மீது 30 நாளுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு , மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய அவை தலைவர் பழனி கலந்து கொண்டனர். வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பொன்னேரி ஊராட்சிக்குப்பட்ட பொன்னேரி, மண்டலவாடி, சின்ன கம்மியம்பட்டு, ரெட்டியூர், ஏலகிரி மலை ஆகிய ஊராட்சிகளுக்கு பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.
இதேபோன்று திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அச்சமங்கலம், மேல் அச்சமங்கலம், பூரிகாமானி மிட்டா, கதிரிமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு அச்சமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் க.தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். ஒன்றி குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜோலார்பேட்டை எம்எல்ஏ க. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
இதில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உடனடியாக அதற்கான உதவிக்கான ஆணைகளை கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர். இதில் திருப்பத்தூர் தாசில்தார் அனந்த கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை (வ.ஊ), ராஜேந்திரன் (கி.ஊ), ஒன்றிய கவுன்சிலர்கள் கே. ஜி. சரவணன், ரேவதி சுரேஷ், சிவப்பிரகாசம், க.உமா கன்ரங்கம், லட்சுமி செந்தில்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.