சென்னை: கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கலைஞரை அவரது நூற்றாண்டில் போற்றுகிற வகையில் ஒன்றிய அரசின் சார்பில் நாளை மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வெளியிடுகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா மறைந்த பின், ஓராண்டு கடந்த நிலையில் 1970ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில், அண்ணாவின் நினைவாக ஒன்றிய அரசின் சார்பில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
அப்போதைய ஆளுநர் உஜ்ஜல் சிங், ஒன்றிய அமைச்சர் ஷெர் சிங் ஆகியோருடன் அவ்விழாவில் முதல்வராக கலைஞர் கலந்துகொண்டார். அண்ணாவின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டபோது, அதனைப் பார்த்த அத்தனை பேருக்கும் ஆச்சரியம். அஞ்சல் தலைக்கேற்ற பொருத்தமான முறையில் பேரறிஞர் அண்ணாவின் படத்தைத் தேர்வு செய்து தந்திருந்தவர் தலைவர் கலைஞர். அத்துடன், அந்தப் படத்தின் கீழே ‘அண்ணாதுரை’ என்று அண்ணாவின் கையெழுத்தையும் இடம்பெறச் செய்துவிட்டார் தலைவர் கலைஞர். இந்திய அஞ்சல் தலை ஒன்றில் தமிழ் எழுத்துகள் இடம்பெற்ற முதல் அஞ்சல்தலை என்பது பேரறிஞர் அண்ணா நினைவு அஞ்சல் தலைதான்.
2009ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அண்ணாவின் பிறந்தநாளன்று சென்னையில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற விழாவில், அப்போதைய குடியரசு தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி, அண்ணாவின் உருவம் பொறித்த ரூ.5 நாணயத்தை வெளியிட்டார். நாணயத்திலும் ‘அண்ணாதுரை’ என்ற அண்ணாவின் கையெழுத்தை இடம்பெற செய்தவர் கலைஞர். இந்திய அரசின் நாணயத்தில் தமிழ் எழுத்துகள் முதன்முதலில் இடம்பெற்றதும் அப்போதுதான். எந்த இடமாக இருந்தாலும் அங்கே தமிழுக்காக வாதாடிய தலைவர் கலைஞர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழுக்கு இந்திய அரசின் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு விழாக்கள், கல்வி நிலையங்களில் பாடச் செய்தார். செம்மொழி மாநாட்டினைச் சிறப்புடன் நடத்தி, அதில் தமிழ் இணைய மாநாட்டிற்கும் உரிய இடமளித்து, இன்று கணினியிலும் கைப்பேசியிலும் எல்லாரும் தமிழைப் பயன்படுத்துவதற்கான ஆக்கமாகவும் ஊக்கமாகவும் திகழ்ந்தார். இமயத்தின் உச்சியில் கொடிநாட்டி, தமிழின் பெருமையை உயரச் செய்த சேரன் செங்குட்டுவனை வரலாறு பேசுவது போல, இந்திய அரசு தனது நினைவாக வெளியிடும் நாணயத்தில் தமிழைப் பொறித்து நம் தாய்மொழிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கலைஞர்.
இமயம் போல உயர்ந்து நிற்கும் கலைஞரின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்படும் நாணய வெளியீட்டு விழாவில் தொண்டர்களாகிய உங்களை காண ஆவலாக இருக்கிறேன். இனிய விழா எனினும் எளிய விழா என்பதால் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சார்ந்த தொண்டர்கள் நேரில் காணவும், தமிழ்நாட்டிலும், தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் நேரலையில் காணவும் அன்புடன் அழைத்து அகம் மகிழ்கிறேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஒன்றிய அரசுக்கு நன்றி
கலைஞர் நூற்றாண்டின் நினைவாக வெளியிடப்படும் ரூ.100 நாணயத்தில் முத்தமிழறிஞரின் உருவத்துடன் அவர் கையெழுத்திலான, ‘தமிழ் வெல்லும்’ என்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன. கலைஞரின் புகழ் மகுடத்தில் மற்றொரு வைரமாக அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டின் முதல்வராக, திமுகவின் தலைவராக, கலைஞரின் மகனாக என் நன்றியை தெரிவிக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.