மதுரை: திருநெல்வேலியை சேர்ந்த மகாராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘கிரின்டர் கே என்ற செயலியின் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி, திருநெல்வேலி போலீசார் என்னை கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் ஓரினச் சேர்க்கைகான செயலியில் உறுப்பினராகியுள்ளார்.
அதில் பழகிய நபர் ஒருவரை தனியாக சந்திக்க விரும்புவதாக கூறி ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரின் செயின் மற்றும் கிரெடிட் கார்டை திருடி ரூ.1.15 லட்சத்தை எடுத்ததற்காக கைதாகி சிறையில் உள்ளார். மனுதாரர் உடனடியாக செயலியிலிருந்து வௌியே வருவார் எனவும், மீண்டும் இதுபோல் செயலில் ஈடுபட மாட்டார் எனவும் எந்த ஒரு செயலியை பயன்படுத்தி, மீண்டும் சமூக ஊடகத்தில் (வலைத்தள பக்கம், கிரின்டர் செயலி) மீண்டும் தோன்ற மாட்டேன் என்று உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்து ஜாமீன் பெறலாம்.
விசாரணை அதிகாரி இந்தசெயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறது என்பதை, ஒன்றிய அரசின் மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் புகார் தெரிவித்து, செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.