திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த அனேரி சிவன் கோயில் பின்புறம் பல லட்சம் பணம் கட்டி கோழி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சூதாட்டத்திற்கு சென்னை, பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சேவல்களை கொண்டு வரும் சண்டையிட்டு ஆதாயம் பெற்று வருகின்றனர். மேலும் சேவல் சண்டையின் மூலம் சினிமா பாணியில் பந்தயம் வைக்கப்பட்டு சண்டை நடைபெறுகிறது. அதிகப்பட்சமாக ரூ.15 லட்சம் வரை பந்தய பணம் கட்டப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக வளர்க்கப்படும் சேவல்களின் கால்களில் கத்தி உள்ளிட்டவைகள் கட்டப்பட்டு சண்டையின்போது கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயம் ஏற்பட்டு சேவல்கள் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
தமிழகத்தில் சேவல் சண்டை தடைசெய்யப்பட்ட நிலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் சேவல் சண்டை தலைதூக்கி வருகி றது. மேலும், சேவல் சண்டையில் கலந்து கொள்ளும் சிலர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளனர். அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை துரிதமாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.