சென்னை: எம்ஜிஎம் குழுமத்தின் நிறுவனர்களாக மாறன் மற்றும் ஆனந்த் ஆகியோர் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான தெற்கு அக்ரிபுரேன் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், ஆனந்த் டிரான்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட், எம்ஜிஎம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், எம்ஜிஎம் டயமண்ட் பீச் ரிசார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சட்டவிரோதமாக எம்ஜிஎம் குழுமம் சார்பில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சட்டவிரோத பணம் பரிமாற்றம் மற்றும் பங்குகளில் முதலீடுகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் எம்ஜிஎம் குழுமத்தின் நிர்வாகிகளான மாறன் மற்றும் ஆனந்த் ஆகியோர் தங்களது நான்கு நிறுவனங்கள் பெயரில் ரூ.52,39,959 மதிப்பிலான (3.31 சதவீதம் பங்குகள்) தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் உள்ள கணக்குகள் மூலம் முதலீடு செய்து இருந்தது உறுதியானது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணபரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான மாறன் மற்றும் ஆனந்த் ஆகியோர் முதலீடு செய்துள்ள 100% பங்குகளை அமலாக்கத்துறை நேற்று முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.