சென்னை: சென்னை ஐஐடி மாணவர்களில் 32 சதவீதம் பேருக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுவதாக ஐஐடி நிர்வாகம் கண்டறிந்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அவ்வப்போது நடக்கிறது. இதனை தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க சென்னை ஐ.ஐ.டி. முடிவெடுத்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தொடக்க நிலையிலேயே பாதிக்கப்படக் கூடிய மாணவர்களை கண்டறிந்து, சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தற்கொலைகளை தடுக்கும் ஆய்வை மேற்கொண்டது. நல்வாழ்வு கணக்கெடுப்பு என்ற பெயரில் இந்த ஆய்வை நடத்தியது. உளவியல் நல்வாழ்வு, சூழ்நிலை, சுய செயல்திறன் உள்ளிட்ட 70 வகையான கேள்விகள் இந்த ஆய்வில் மாணவர்களிடையே கேட்கப்பட்டன.
ஆய்வு முடிவில், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சேருபவர்களில் 32 சதவீதம் பேருக்கு, அதாவது 3ல் ஒருவருக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுவதாக கண்டறிந்துள்ளனர். தனிமை, சமூகப் பிணைப்பு இல்லாதது, மற்றவர்களின் கருத்துகளில் அதிக அக்கறை காட்டுவது, வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாதது போன்றவையெல்லாம், புதிதாக கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக இருப்பதாக சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது. அதற்கேற்றாற்போல், மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை, அதனை சமாளிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி என்பது போன்ற சுய விழிப்புணர்வு கருத்தரங்குகள், திறன் பயிற்சிகள் நடத்த சென்னை ஐ.ஐ.டி. திட்டமிட்டு இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், கட்டாய பொழுதுபோக்கு படிப்புகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள் பரதநாட்டியம், கர்நாடக இசை, ஓவியம், கதை எழுதுதல், யோகா மற்றும் பேச்சுத் தமிழ் பாடங்களை தேர்ந்தெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் 2 ‘கிரெடிட்’களையும் பெறுவார்கள். மேலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நலன் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை ஐ.ஐ.டி. அவ்வப்போது பெற்றோருக்கு அது குறித்து செய்திகளையும் பகிர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கான குறைகளை துறைத் தலைவர்கள், டீன்கள், இயக்குனர் ஆகியோரிடம் தெரிவிக்கலாம். இதற்காக புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்படக் கூடிய குறைகள் 48 மணி நேரத்துக்குள் தீர்க்கப்படும் என சென்னை ஐ.ஐ.டி. அறிவித்துள்ளது.