சென்னை: சென்னை ஐஐடிக்கு முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். ஐஐடி வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியவர் யார் என பார்க்கலாம். சென்னை ஐஐடி-யில் 1970ம் ஆண்டு ஏரோனாட்டிக் பாடப்பிரிவில் எம்.டெக் படித்த முன்னாள் மாணவர் டாக்டர்.கிருஷ்ணா சிவுகுலா. இவர் மெட்டல் இன்ஜெக்ஷன் மோல்டிங் என்ற தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து இந்தோ எம்.ஐ.எம். என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆண்டுக்கு ரூ.1000 கோடி வருவாய் ஈட்ட கூடிய 2 தொழிற்சாலை கள் நடத்தி வரும் கிருஷ்ணா சிவுகுலா, ஐஐடி வரலாற்றிலேயே யாரும் கொடுக்காத அளவில் ரூ.228 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சென்னை ஐஐடி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; அமெரிக்கா போல முதலாளித்துவ நாடாக இந்தியா மாறினால் தான் தொழில் வளர்ச்சி பெருகும் என்றார். கிருஷ்ணா சிவுகுலா கொடுத்த நன்கொடை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, ஸ்காலர்ஷிப், ஸ்பான்சர்ஷிப் வழங்க பயன்படும் என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். ரூ.228 கோடி கொடுத்துள்ள கிருஷ்ணா சிவுகுலாவை பெருமைப்படுத்தும் விதமாக ஐஐடி வளாகத்தில் உள்ள ஒரு மையத்திற்கு கிருஷ்ணா சிவுகுலா அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.