மும்பை: பிஎச்டி படிப்பதாக கூறிக்கொண்டு ஐஐடி மும்பையில் 14 நாட்கள் தங்கியிருந்த போலி மாணவரை போலீசார் கைது செய்தனர். ஐஐடி மும்பையில் கடந்த ஜூன் 26ஆம் தேதி அன்று அங்குள்ள சோபாவில் ஒருவர் தூங்கிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த ஊழியர், யார் நீங்கள் என்று கேட்டதும் அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த நபர் பல நாட்கள் வளாகத்தில் சுற்றி வந்ததும், அவர் ஐஐடி மாணவர் இல்லை என்பதையும் கண்டு பிடித்தனர். இதையடுத்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் பிலால் அகமது தெலி என்பது தெரிய வந்தது. அப்போது அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். 22 வயதான பிலால், ஐஐடி மும்பை மாணவராக தன்னைக்காட்டிக்கொண்டு 14 நாட்கள் அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ளார். விடுதி அறைகளில் சோபாவில் தூங்குவது, கல்லூரியில் விரிவுரைகளில் கலந்துகொள்வது மற்றும் இலவச காபி கிடைக்கும் இடங்களுக்குச் செல்வது அவரது வழக்கம்.
அவர் தன்னை ஒரு பிஎச்டி மாணவர் என்று அறிமுகம் செய்து கொண்டார். அதற்காக போலி சேர்க்கை ஆவணங்களைப் பயன்படுத்தினார். கடந்த ஆண்டும் ஐஐடி மும்பை வளாகத்தில் ஒரு மாதம் தங்கியிருந்ததாக பிலால் ஒப்புக்கொண்டார். இந்த ஆண்டு மும்பை ஐஐடியில் 14 நாட்கள் தங்கியிருந்த காலக்கட்டத்தில் 21 போலி மின்னஞ்சல் ஐடிகளை உருவாக்கியது தெரிய வந்துள்ளது. உயர்பாதுகாப்பு மிக்க ஐஐடி மும்பைக்குள் ஊடுருவி உள்ளது பற்றியும் விசாரணை நடக்கிறது.