ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகர் ஜீவாவிடம் கேள்வி கேட்டபோது செய்தியாளர்களிடம் அவர் ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி நகர் மதுரை சாலையில் புதிய ஜவுளிக்கடை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகர் ஜீவா, ‘‘அப்படியா எனக்கு நீங்கள் சொல்லித் தான் விஷயம் தெரிகிறது’’ என தெரிவித்தார். மேலும் செய்தியாளர் இன்றைக்கு இப்பிரச்னை பூதாகரமாகி உள்ளதே என கேட்டதற்கு, ‘‘இதற்கு முன்பு மீ டூ விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. தற்போது இந்த விவகாரம் பேசப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிலை இல்லை. பல இன்டஸ்ட்ரிகளில் பல விஷயங்கள் நடக்கிறது. உங்களுக்கு நியூஸ் தான் வேலை. எங்களைப் பொறுத்தவரை எங்களை சுற்றி நல்ல அட்மாஸ்பியர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்’’ என்றார்.
இதற்கு செய்தியாளர், ‘‘நீங்கள் ஒரு நடிகர். இன்றைக்கு கூட நடிகை ராதிகா தமிழ்நாட்டிலும் இதுபோன்று நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு உள்ளதாக கூறியிருக்கிறாரே’’ என கேட்டார். அதற்கு, ‘‘மேலும் இதனை பற்றி பேச வேண்டாம்’’ என்று கூறிவிட்டு நகர்ந்தார். அப்போது அருகில் இருந்தவரிடம் நடிகர் ஜீவா, ‘‘இதுபோன்ற இடங்களில் அறிவில்லாமல் கேள்வி கேட்கிறார்கள்’’ என்று முணுமுணுத்தபடி சென்றார். இதனை கேட்ட ஒரு செய்தியாளர், ‘‘யாருக்கு அறிவில்லை’’ என அவரிடம் திருப்பி கேட்க நடிகர் ஜீவாவிற்கும் அந்த செய்தியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜவுளி நிறுவனத்தினர் நடிகரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.