?பூனை இடமிருந்து வலம் போனால் சுகம் என்கிறார்களே?
– சிவபிரகாசம், தர்மபுரி.
இது சகுனத்தில் சாஸ்திர விஷயம். கருடன், மான், கோட்டான், கீரி, அணில், நாய், பூனை, மூஞ்சூறு இவைகள் வலம் இருந்து இடம் செல்வது சுபம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் போலவே காகம், நரி, கிளி, குரங்கு, கொக்கு, மயில், குயில், மாடு, எருமை, இடமிருந்து வலம் போனால் சுகம். இதில் இன்னொரு நுட்பமான விஷயம். சாதாரண பூனை வலம் இருந்து இடம் போனால் சுபம். ஜவ்வாது பூனை இடமிருந்து வலம் போனால்தான் சுபம்.
?திங்கள் என்பது ஒரு கிழமையின் பெயர்தானே, இதனை மாதத்தின் பெயருடன் இணைத்து சித்திரைத் திங்கள், ஜனவரித் திங்கள் என்றெல்லாம் அழைப்பதன் காரணம் என்ன?
– முத்துமீனா, மேலூர்.
தமிழ்மொழியில் மாதங்களைத் ‘திங்கள்’ என்று அழைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. திங்கள் என்பது கிரஹங்களில் சந்திரனைக் குறிப்பதாகும். ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ, அந்த நட்சத்திரத்தையே மாதத்தின் பெயராகக் கொண்டனர். உதாரணத்திற்கு, சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்திலும், வைசாகம் எனப்படும் வைகாசியில் விசாக நட்சத்திரத்திலும் என 12 மாதங்களும் பௌர்ணமி வருகின்ற நட்சத்திரத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இந்த மாதங்கள் பௌர்ணமி சந்திரனோடு தொடர்புடையவை என்பதால் அவற்றை ‘திங்கள்’ என்று தமிழ்ப் பெயராகச் சொல்கிறார்கள். தற்கால நடைமுறையில் ஒருசிலர் ஆங்கில மாதங்களையும்கூட ஜனவரித் திங்கள், பிப்ரவரித் திங்கள் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்! சித்திரை, வைகாசி போன்ற தமிழ் மாதங்களை மட்டும்தான் திங்கள் என்று சொல்ல வேண்டுமே தவிர, ஆங்கில மாதங்களையும் இதே நடைமுறையில் சொல்வது முற்றிலும் தவறு.
?கோயில் நுழைவாயிலில் உள்ள படியினை சிலர் மிதிக்காமல் வணங்கி தாண்டிச் செல்வது ஏன்?
– நாராயணன், கூறைநாடு.
கோயில் நுழைவாயில் மட்டுமல்ல, நமது வீட்டில் உள்ள நுழைவாயில் படியினையும் மிதிக்கக் கூடாது. வாயில் படியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். துவார மகாலட்சுமி என்று சொல்வார்கள். வாயிற்படி அமைக்கும்போது அதற்கு கீழே தங்கம், வெள்ளி முதலான பஞ்சலோகத்தையும் முத்து, பவழம் உள்ளிட்ட நவரத்தினங்களையும் வைத்து அதன்மீது வாயில்படியை நிறுத்துவார்கள். வெள்ளிக் கிழமைகளில் நம் வீட்டுப் பெண்கள் வாயிற்படிக்கு மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைப்பதும், வாயிற்படியில் விளக்கேற்றி வைப்பதும், விசேஷ நாட்களில் மாலை அணிவித்து வணங்குவதும் மகாலட்சுமி வாயிற்படியில் வாசம் செய்கிறாள் என்ற நம்பிக்கையில்தான். அதனால்தான் நம்மவர்கள் கோயில் உட்பட அனைத்து இடங்களிலும் வாயில் படியினை மிதிக்காமல் தாண்டிச் செல்கிறார்கள்.
?வீட்டில் கருடபுராணம் படிக்கக் கூடாது என்று சொல்வதன் காரணம் என்ன?
– டி.என்.ரங்கநாதன், திருவானைக்காவல்.
நிறைய வாசகர்கள் இந்த கேள்வியினை தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். நம்மில் பலருக்கு கருடபுராணம் என்ற ஒன்று இருப்பதே திரைப்படத்தின் வாயிலாகத்தான் தெரிய வந்துள்ளது. இன்னமும் சில வீடுகளில் மகாபாரதம் படித்தால் குடும்பத்தில் சண்டை வரும், ராமாயணம் படித்தால் கணவன் – மனைவி பிரிவு உண்டாகும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையே நம் வீட்டுப் பிள்ளைகள் தொலைக் காட்சித் தொடர்களின் மூலம்தானே அறிந்து கொள்கிறார்கள்! இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றித் தெரியவில்லை. இந்தியாவின் பிரதானமான இதிகாசங்களுக்கே இந்த நிலைமை எனும்போது மற்ற புராணங்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அதிலும் கருடபுராணம் என்பது நரகத்தினைப் பற்றியும், அதில் தரப்படும் தண்டனைகளைப் பற்றியும் சொல்லப்படுவது என்ற கருத்து அடிமனதில் பதிந்திருக்கும்போது, அதை வீட்டில் வைத்துப் படித்தால் துர்மரணங்கள் வீட்டில் நிகழும் என்ற மூடநம்பிக்கையைப் பரப்பி வைத்துள்ளார்கள்.
கருடபுராணம் மட்டுமல்ல, 18 புராணங்களையும் வீட்டில் வைத்துப் படிக்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கவேண்டும். அவ்வாறு புரியாத பட்சத்தில் நாமாக கற்பனை செய்து புரிந்துகொள்ளாமல், தகுதி வாய்ந்த குருவின் உதவியோடு அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். கருடபுராணத்தை வீட்டில் வைத்து படிக்கக்கூடாது என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே.
?எட்டாவது ராசி ஆண், ஆறாவது ராசி பெண்ணையும், ஆறாவது ராசி ஆண், எட்டாவது ராசி பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாமா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
– நா.ஜெயராமன், கல்லிடைக்குறிச்சி.
இதனை ஜோதிடர்கள் ‘ஷஷ்டாஷ்டகம்’ என்பார்கள். அதாவது, திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது பெண்ணின் ராசி முதல் ஆணின் ராசி வரை எண்ணும்போது ஆணின் ராசி ஆறாவதாகவும், ஆணின் ராசியிலிருந்து பெண்ணின் ராசி எட்டாவதாகவும் வந்தால் அதனை ‘ஷஷ்டாஷ்டகம்’ என்றும் இருவரும் சதாசண்டையிட்டுக் கொண்டு இருப்பார்கள் என்றும் பொதுவாக சொல்வார்கள். ஆனால், இதற்கு விதிவிலக்கும் உண்டு. மணமகன் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய பெண் ராசிகளில் பிறந்து, மணமகள் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் முதலிய புருஷ ராசிகளில் பிறந்திருந்தால் இதனை ‘அனுகூல ஷஷ்டாஷ்டகம்’, அதாவது, ‘ஷஷ்டாஷ்டக தோஷ நிவர்த்தி’, விவாஹம் செய்யலாம் என்று ஜோதிடர்கள் சொல்வார்கள். அதே போன்று ராசி அதிபதி ஒருவனே ஆகில் தோஷம் கிடையாது என்பதும் மற்றொரு விதி ஆகும். இந்த விதியின் படி மேஷம், விருச்சிகம், ரிஷபம், துலாம் ஆகிய இந்த இரண்டு ஜோடிகளுக்கும் ஷஷ்டாஷ்டக தோஷம் என்பது கிடையாது. ராசி அதிபதிகள் நட்புறவுடன் இருந்தாலும், இந்த தோஷம் அண்டாது. பொதுவான விதியை மட்டும் கருத்தில் கொள்ளாது, அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் மணமக்களின் ஜாதகங்களைக் காண்பித்து தீர்மானிப்பதே நல்லது.