சென்னை: சிலை கடத்தல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு தன்னை வழக்கில் சிக்க வைத்ததாக டிஎஸ்பி தொடர்ந்த வழக்கில், மாஜி ஐஜி பொன்.மாணிக்கவேலின் பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக நேற்று காலை முதல் 8 மணி நேரம் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டது. தமிழக கோயில்களில் இருந்து மாயமான பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவை உருவாக்கியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அந்தப் பிரிவின் ஐஜியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார்.
அப்போது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச்சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர்பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பொன்.மாணிக்கவேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா முராரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்.மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, “காணாமல்போன சில சிலைகள் மீட்கப்பட்டன. தற்போதும் அந்த வழக்குகள் நடந்து வருகின்றன.
ஆனால் தன்மீது குற்றம்சாட்டிய காதர்பாட்ஷா ஒரு போலீஸ் அதிகாரி. அவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் உள்ளன. சிலை கடத்தல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட அவர், காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்மீது அவதூறு பரப்பி இதுபோன்ற தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவரது புகாரை கேட்டு உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முழுமையான விவரங்களை கருத்தில் கொள்ளாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
எனவே சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.இந்த வாதத்தை முழுமையாக ஏற்க மறுத்த நீதிபதிகள், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டதை எதிர்த்து பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து, பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவும் செய்தனர்.
சிபிஐ அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணையின் பிடிஇறுகுவதால், அதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, கோயில், கோயிலாக சென்று தமிழக அரசுக்கு எதிராக பேட்டி கொடுத்து வந்தார் பொன்.மாணிக்கவேல். கோயிலில் சுண்டல் வழங்குவதில் முறைகேடு, ஊழியர்களுக்கு சம்பளம் குறைவு என்றெல்லாம் கூறி வந்தார். ஆனாலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரித்து வந்தது.
இந்தநிலையில் பாலவாக்கம் காமராஜர் சாலையில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் 8 மணி நேரம் சோதனை நடத்தினர். வீட்டில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. சிலைகள் தொடர்பான அரசு ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பொன்.மாணிக்கவேலுவிடம் அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பொன்மாணிக்கவேல் மீது 120பி, 166, 166ஏ, 167, 182, 193, 199, 506, 195ஏ உள்பட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் என்றும் முதல்தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பொன்.மாணிக்கவேல், பொய் வழக்குப்பதிவு செய்திருப்பது உண்மை என தெரியவந்தால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பும் ஏற்படும் என்றும் சிபிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஐஜியான பொன் மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும், வீட்டில் சோதனை நடத்தியிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.