மதுரை: சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரித்தால்தான் உண்மை தெரியும் என ஐகோர்ட் கிளையில் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சிலை கடத்தல் தொடர்பான வழக்கை டிஐஜி அந்தஸ்திற்கு குறையாத அலுவலரைக் கொண்டு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், என் மீது சிபிஐ எஸ்பி வழக்குப்பதிந்துள்ளார். என் மீது வழக்குப்பதிவு செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை. என் மீதான வழக்கும், என் வீட்டில் இருந்த பொருட்களை சிபிஐ கைப்பற்றியதும் சட்ட விரோதம். எனவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. டிஎஸ்பி காதர் பாட்ஷா தரப்பில், மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது வழக்கறிஞர் ஆஜராகி, ‘‘சிலை கடத்தல் தடுப்பு வழக்கை மனுதாரர் ஆரம்பம் முதலே ஒருதலைபட்சமாகவே விசாரித்தார். டிஎஸ்பி காதர் பாட்ஷா மீது வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வழக்குப்பதிந்து சிறையில் அடைத்துள்ளார். சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான சுபாஷ் கபூருக்கு மறைமுகமாக உதவிடும் வகையில் தான் மனுதாரர் செயல்பட்டுள்ளார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது’’ என்றார்.
சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சீனிவாசன், ‘‘மனுதாரர் மீதான வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டில் இருந்து பழமையான சிலைகள் பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்டு கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் கண்காணிப்பில் டிஎஸ்பி காதர் பாட்ஷா விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கை அப்போதைய காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் தனது விசாரணைக்கு எடுத்துள்ளார். அவரது விசாரணை முறையானதாக இல்லை. உண்மை குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தில், காதர் பாட்ஷா மீது பொய் குற்றச்சாட்டை கூறி அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
சிறையில் உள்ள சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை பாதுகாக்கும் வகையில் தான் பொன் மாணிக்கவேல் செயல்பட்டு உள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் முதல் கட்ட விசாரணை முடித்து போதுமான முகாந்திரம் உள்ளதால் தான் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரரை கைது செய்து விசாரித்தால் தான் உண்மையை கண்டறிய முடியும். ஏன் பொய்யாக டிஎஸ்பி காதர் பாட்ஷாவை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும்? சுபாஷ் கபூருக்கு எந்த வகையில் உதவி செய்தார் என்பது குறித்தெல்லாம் கண்டறிய வேண்டியுள்ளது. எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி, ‘‘இந்த வழக்கில் சுபாஷ் கபூருக்கு ஐஜி பொன் மாணிக்கவேல் நேரடியாக உதவி செய்ததற்கான ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா’’ என்றார். அப்போது சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் சில ஆவணங்கள் நீதிபதி முன் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனு மீதான விசாரணயை இன்றைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.