ஐஸோல்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம் இந்திய ஒற்றுமைக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மிசோரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு நாள் பயணமாக நேற்று மிசோரம் வந்தடைந்த ராகுல் காந்தி மக்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டு, பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று மிசோரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி; மிசோரம் வருவது எப்பொழுதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
1986ல் முதன்முதலில் இங்கு வந்தபோது எனது பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. அந்த நேரத்தில், மிசோரம் வன்முறையிலிருந்து அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. நீங்கள் 1987ல் மாநில அந்தஸ்தை அடைந்தீர்கள். இது ஒரு நீண்ட பயணம். எந்தவொரு முன்னேற்றமும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில்தான் கட்டமைக்கப் படுகிறது. RSS-பாஜகவின் வெறுப்பு நிறைந்த சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடுவதற்காக நான் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடந்தேன். ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம் இந்திய ஒற்றுமைக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது.
எங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மத நடைமுறைகள் உள்ளன. எங்களைப் பொறுத்தவரை, இவை இந்தியா என்ற எண்ணத்தின் அடித்தளம். மக்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கும், அவர்களின் மொழியைப் பேசுவதற்கும் அல்லது அவர்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதற்கும் பயப்படும் இந்தியா, நாம் விரும்பும் இந்தியா அல்ல. பாஜகவின் சித்தாந்தம் என்ன செய்ய முடியும் என்பதற்கு மணிப்பூரில் நடப்பது மிகப்பெரிய உதாரணம்.