சென்னை: அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க மறுத்த தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் செயல் பாரபட்சமானது. அவர்களுக்கும் அகவிலைபடி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு அக்டோபரில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17லிருந்து 28% ஓய்வூதியமாகவும், 28% இருந்து 31 % உயர்த்தப்பட்டது. அதனடிப்படையில், 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து தமிழ்நாடு அரசும் தன் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர் ஆகியோருக்கு அதே அளவு உயர்த்தி அறிவித்தது.
இந்த உயர்வை தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நல சங்கம் உள்ளிட்டோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், 2002ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணையின்படி அரசு ஊழியர்களுக்கான நலத் திட்டத்தை நஷ்டத்தில் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு அமல்படுத்த வேண்டாம். ஒரு வேளை வழங்குவதாக இருந்தால் அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அரசின் ஒப்புதல் கேட்டு குடிநீர் வாரியம் அனுப்பிய கடிதத்தை ஆய்வு செய்த அரசு, 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் இருந்து வாரியத்தின் சொந்த செலவில் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படியை கொடுத்துவிட்டு, ஓய்வூதியதாரர்களுக்கு மறுத்தது பாரபட்சமானது. நிதி நெருக்கடியில் இருந்திருந்தால் ஊழியர்களுக்கும் கொடுத்திருக்கக் கூடாது. ஊழியர்களுக்கு ஜனவரியில் இருந்தும், ஓய்வூதியர்களுக்கு அக்டோபரில் இருந்தும் வழங்குவது பாரபட்சமானது. எனவே, ஓய்வூதியதாரர்களுக்கும் 2022 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வை கணக்கிட்டு 4 மாதங்களில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.