சென்னை: சென்னை மாகாணத்தின் கவர்னராக 1687 முதல் 1692வரை பதவி வகித்து வந்தவர் எலிகு யேல். இவரது பெயரில் அமெரிக்காவில் உலகப்புகழ் பெற்ற யேல் பல்கலைக்கழகம் உள்ளது. யேல் கவர்னராக இருந்தபோது அவரது மகன் ஜேக்கப் டேவிட் எலிகு யேலும் அவரின் நண்பனான ஜோசப் ஹெய்மரும் இறந்துள்ளனர். இதையடுத்து, அவர்களின் உடல்களை உயர் நீதிமன்ற வளாகத்தில் முந்தைய சட்டக்கல்லூரியின் பின்புறம் அடக்கம் செய்து அதில் சமாதியையும் கவர்னர் யேல் கட்டியுள்ளார்.
பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த யேல் சமாதியை பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவித்து ஆங்கிலேய அரசு 1921ல் அறிவிப்பாணை வெளியிட்டது. இந்நிலையில், பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்த சமாதியை வேறு இடத்திற்கு மாற்றுமாறு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கடந்த 2023 ஜூன் மாதம் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் டி.மோகன் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆஜராகி, இந்த சமாதிக்கு பின்னால் பெரிய வரலாறு உள்ளது. அதனால்தான் இந்த சமாதி பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பழங்கால நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டு இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், யேல் நினைவு சமாதியை பழங்கால நினைவு சின்னமாக அறிவித்த 1921ம் ஆண்டைய அறிவிப்பாணையை 15 நாட்களில் தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர்.