மதுரை: மருத்துவ கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ், கேரளாவில் சேகரிக்கப்பட்ட மருத்துவ கழிவுகளை லாரி மூலம் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்து ஆலங்குளம் – நெல்லை ரோட்டில் குருவன்கோட்டை என்ற கிராமத்தில் கொட்டியுள்ளார். சுகாதார ஆய்வாளரின் புகாரின் பேரில், ராஜேஷ் உள்ளிட்ட சிலர் மீது பயோ மருத்துவ கழிவுகள் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆலங்களம் போலீசார் வழக்கு பதிந்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட லாரியை விடுவிக்க ஆலங்குளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆலங்குளம் எஸ்ஐ தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்புமின்றி மருத்துவ கழிவுகள் முறையாக அழிக்கப்பட வேண்டும். இதை முறைப்படுத்திடும் வகையில் தான் பயோ மருத்துவ கழிவுகள் ேமலாண்மை சட்டம் 2016 கொண்டு வரப்பட்டது.
சுத்திகரிக்கப்படாத மருத்துவ கழிவுகளை 48 மணி ேநரத்திற்கு மேல் வைத்திருக்கவோ, 75 கி.மீ அதிக தொலைவுக்கு கொண்டு செல்லவோ கூடாது. இதை மீறி கொண்டு செல்வது ஆரோக்கியமற்றது. இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்த முடியாது. இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது.கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் கண்காணிப்பு குழுவை அரசு அமைத்துள்ளது. பயோ மருத்துவ கழிவுகள் மேலாண்மை சட்டத்தை மீறுவோர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை குறித்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம்.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் மருத்துவ கழிவுகளை கொண்டு வருவதை தடுத்திடத் தேவையான சட்டத் திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். 45 சிறு வழக்குகளும், 9 வழக்கில் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்துள்ளதாகவும், ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுவோர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இது தான் சரியான நேரம். லாரியை விடுவித்ததை எதிர்க்கும் இந்த மனு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.