டெல்லி : இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில் இருந்து 8.50 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. த்ரெட் ஆக்டர் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனாளி ஒருவர் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் ஐசிஎம்ஆர் பெற்ற தரவுகளில் இருந்து சுமார் 8.5 கோடி பேரின் பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் முகவரியுடன் கூடிய ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, தரவு கசிவு குறித்து சிபிஐ விசாரணையைத் தொடங்கி உள்ளது.
ஐசிஎம்ஆர் சர்வர்களை கடந்த ஆண்டில் மட்டும் 6000 முறை மர்ம நபர்களால் ஹாக் செய்ய முயற்சிக்கப்பட்டதாகவும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர் சைபர் தாக்குதல் நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகின. இதே போல இந்த ஆண்டின் தொடக்கத்தில் எய்ம்ஸ் சர்வர்களை ஹேக் செய்து 1 டிபிக்கும் அதிகமான டேட்டாக்களை கைப்பற்றிய மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாயை கேட்டு இருந்தனர். இதனால் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனைத்து தரவுகளும் கைப்பட எழுதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.